தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் இவ்வாண்டின் முதல்பாதியில் அதிகம்

2 mins read
b9d7e276-326c-412c-83c3-2471f196012a
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் சாலை விபத்துகளில் 79 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 72 பேர் மாண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் பாதியில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் காயமடைந்ததாகவும் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை உயிரைப் பறிக்கும் 78 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அதுபோன்ற 70 விபத்துகள் நடந்தன. 

அதேபோல, சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 72லிருந்து 79ஆக அதிகரித்துள்ளது.

2024 ஜனவரி முதல் ஜூன் வரையில் காயங்களை ஏற்படுத்திய 3,437 விபத்துகள் நிகழ்ந்தன. இவ்வாண்டு அதே காலகட்டத்தில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 3,740ஆகப் பதிவாகி உள்ளது.

விபத்துகளில் கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில்  4,665 பேர் காயமடைந்த நிலையில், இவ்வாண்டு ஜூன் வரை அந்த எண்ணிக்கை 4,860ஆக அதிகரித்தது.

போக்குவரத்துக் காவல்துறை தனது ஆண்டு நடுப்பகுதி நிலவர அறிக்கையில் இந்த விவரங்களை வெளியிட்டள்ளது.

சாலை விபத்துகள் மற்றும் அவற்றால் ஏற்படும் காயம், மரணங்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளதாக அது அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை ஐந்தாண்டு உச்சத்தைத் தொட்டது.

சாலை விபத்துகள் அதிகரிப்பதைக் கவனத்தில் கொண்ட அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவதாகவும் போக்குவரத்துக் காவல்துறை கூறியுள்ளது.

புதிய தொழில்நுட்ப கேமராக்கள்

போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டுபிடிக்க, வரும் மாதங்களில், ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறக் கோடுகளைக் கொண்ட புதிய தொழில்நுட்ப கேமராக்கள் தீவு முழுவதும் பொருத்தப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக யு-டெர்ன் முறையில் திரும்பும் வாகனங்கள், இரட்டை வெள்ளைக் கோட்டைக் கடக்கும் வாகனங்கள் போன்றவை உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை அந்தத் தொழில்நுட்ப கேமராக்கள் படம் பிடிக்கும் என்று தெரிவித்த போக்குவரத்துக் காவல்துறை இதுபோன்றவைதான் பயங்கர விபத்துகளுக்குக் காரணமாகின்றன என்றது.

சிவப்பு சமிக்ஞை விளக்குகளை மீறிச் சென்ற விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 47 ஆக இருந்தது. இவ்வாண்டு அது 65ஆக அதிகரித்துவிட்டது.

இருப்பினும், ஆறுதல் செய்தியாக, சிவப்பு சமிக்ஞை விளக்குகளை மீறிச் சென்றதாகப் பிடிபட்ட வாகனங்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 25.3 விழுக்காடு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் வரை 17,508 வாகனங்கள் பிடிபட்ட நிலையில் இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 13,703ஆகக் குறைந்துவிட்டது.

வேக வரம்பு மீறல்

அதேவேளை, வேக வரம்பு விதிமீறல் சம்பவங்கள் 45.5 விழுக்காடு கூடிவிட்டன. கடந்த ஆண்டு 81,141 ஆக இருந்த அச்சம்பவங்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 118,076ஆக அதிகரித்துவிட்டது.

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மணிக்கு 178 கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் செலுத்தப்பட்டதே ஆக மோசமான சம்பவமாகப் பதிவாகி உள்ளது. அந்தச் சாலைக்கான வேகவரம்பு மணிக்கு 80 கிலோமீட்டர்.

குறிப்புச் சொற்கள்