சிங்கப்பூர் இளையர் உயிரிழப்புக் காரணங்கள்: சாலை விபத்துகளுக்கு இரண்டாவது இடம்

சிங்கப்பூர் இளையர் உயிரிழப்புக் காரணங்கள்: சாலை விபத்துகளுக்கு இரண்டாவது இடம்

2 mins read
உலகளாவிய ஆய்வில் தெரியவந்துள்ளது
9a1c577d-e723-4ca0-b1eb-a9d4212efafa
சிங்கப்பூர், ஜப்பான் போன்ற உயர் வருவாய் ஈட்டும் ஆசிய-பசிபிக் நாடுகளில் சைக்கிளோட்டிகள் காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆய்வு கூறுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

2023ஆம் ஆண்டில் 15 முதல் 29 வயதுடையோரின் மரணத்திற்குச் சாலை விபத்துகள் இரண்டாவது முக்கியக் காரணமாக இருந்தன. தேசிய அளவில் காயங்களால் ஏற்படும் மரணங்களில் இது மூன்றாவது இடத்தில் உள்ளது என்று புதிய உலகளாவிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சைக்கிளோட்டிகளும் மோட்டார்சைக்கிளோட்டிகளும் சிங்கப்பூரில் அதிகம் காயமடைகின்றனர். அதேவேளையில், மோட்டார்சைக்கிளோட்டிகள் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இளம் வயதில் ஏற்படும் மரணங்கள் அதிக வாழ்நாள் இழப்பை ஏற்படுத்துகின்றன. மூளை அல்லது தண்டுவடக் காயங்கள் போன்ற தீவிரப் பாதிப்புகள் வாழ்நாள் உடற்குறைபாடுகளுக்கு வழிவகுக்கின்றன.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியும் சுகாதார அளவீட்டு மதிப்பீட்டுக் கழகமும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.

‘த லான்செட் பப்ளிக் ஹெல்த்’ இதழில் வெளியான இந்த ஆய்வு, 204 நாடுகளின் தரவுகளைக் கொண்டு 1990ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியுள்ளது.

2023ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளால் அகால மரணம் மற்றும் உடற்குறைபாடு ஏற்பட்டு, கிட்டத்தட்ட 9700 ஆரோக்கியமான வாழ்வு ஆண்டுகள் இழக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில், 4,786 ஆண்டுகள் அகால மரணங்களாலும், எஞ்சிய 4,894 ஆண்டுகள் விபத்துக்குப் பிந்தைய உடற்குறைபாடுகளாலும் இழக்கப்பட்டன.

சாலை விபத்துக் காயங்களின் விகிதம் 54.8 விழுக்காடும், மரண விகிதம் 82.3 விழுக்காடும் குறைந்துள்ளன. இருப்பினும், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற உயர் வருவாய் ஈட்டும் ஆசிய-பசிபிக் நாடுகளில் சைக்கிளோட்டிகள் காயமடையும் போக்கு அதிகரித்து வருவதாக ஆய்வு கூறுகிறது.

சாலை விபத்துகள் தவிர்க்க முடியாதவை அல்ல என்று ஆய்வின் இணை ஆசிரியர் மேரி இங் தெரிவித்தார்.

“வேகத்தைக் கட்டுப்படுத்துதல், தலைக்கவசம் அணிவதை உறுதிசெய்தல், உள்கட்டமைப்பு, சட்ட அமலாக்கம், அவசரகாலச் சிகிச்சை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடே மனிதத் தவறுகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும்,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் மோட்டார்சைக்கிளோட்டிகள், சைக்கிளோட்டிகள், நடந்துசெல்வோர், முதியோர் ஆகியோரைப் பாதுகாக்கும் வகையில் சாலை அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உலகளாவிய சவால்

உலக அளவில் 2023ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் 50.9 மில்லியன் காயங்களும் 1.34 மில்லியன் மரணங்களும் ஏற்பட்டன. அதனால், 75.3 மில்லியன் ஆரோக்கியமான ஆண்டுகள் இழக்கப்பட்டன.

10 முதல் 39 வயதுடைய ஆண்களின் மரணத்திற்குச் சாலை விபத்துகளே முதன்மைக் காரணமாக உள்ளன. குறைந்த வருவாய் ஈட்டும் நாடுகளில் சாலை விபத்து மரண விகிதம் உயர் வருவாய் நாடுகளைவிட ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.

இறப்புகள், பலத்த காயங்களைத் தடுத்தல்

இந்த ஆய்வு தனித்தனி கொள்கைகளின் விளைவுகளை மதிப்பிடவில்லை.

என்றாலும், சட்ட அமலாக்கத்துடன் பாதுகாப்பான உள்கட்டமைப்பு, தகுந்த வாகனப் பாதுகாப்புத் தரநிலைகள், பொதுக் கல்வி, விபத்துக்குப் பிந்தைய பயனுள்ள பராமரிப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்போதே மிகப்பெரிய முன்னேற்றம் எட்டப்படுகிறது என்பதை முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

2030ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் சாலை மரணங்களைப் பாதியாகக் குறைக்க ஐக்கிய நாட்டு நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்குக் குறைந்தது 200 பில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் முதலீடு தேவைப்படும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சாலை விபத்துஇளையர்மோட்டார்சைக்கிள்வாகனம்மரணம்ஆய்வுகாயம்