தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலைக் குழிகள் 40% குறைந்தன; புதிய பராமரிப்புத் திட்டங்கள் அறிமுகம்

2 mins read
584c906e-f983-4e46-90ab-d30d7b34f6b9
சாலைகளில் உள்ள குழிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்குத் தனது மேம்படுத்தப்பட்ட முன்கூட்டிய பராமரிப்பு முயற்சிகளே காரணம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (அக்டோபர் 2) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் சாலைகளில் உள்ள குழிகளின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறைந்து வருகின்றன. 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காணப்பட்ட சாலைக் குழிகளின் எண்ணிக்கையைவிட இவ்வாண்டு அதே காலகட்டத்தில் இருக்கும் சாலைக் குழிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 40 விழுக்காடு குறைவு.

இதற்குத் தனது மேம்படுத்தப்பட்ட முன்கூட்டிய பராமரிப்பு முயற்சிகளே காரணம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (அக்டோபர் 2) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறியது.

சாலை ஆய்வுத் தரவுகளைப் பயன்படுத்துவது, போக்குவரத்துப் போக்குகளைப் பகுப்பாய்வு செய்வது, சாலை வகைகளை ஆராய்வது உட்பட்ட நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும்.

பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்துத் திட்டமிட்டு அவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதை ஆணையம் சுட்டியது.

இதன் விளைவாகச் சாலைகளின் மேற்பரப்பு சேதமடையத் தொடங்கும்போதே அதைச் சரிசெய்யும் நடவடிக்கைகளை ஆணையத்தால் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் சாலைகளில் குழிகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதுடன் சாலைகளின் ஒட்டுமொத்த ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம் என்று ஆணையம் கூறியது.

தற்போதைய நிலவரப்படி, விரைவுச்சாலைகளில் அதிகாரிகள் ஒவ்வொரு வாரமும் ஆய்வு நடத்துகின்றனர். முக்கியச் சாலைகளில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும் சிறிய சாலைகளில் எட்டு வாரங்களுக்கு ஒருமுறையும் ஆய்வு நடத்தப்படுகிறது.

தனது பொறுப்பின்கீழ் இருக்கும் 9,500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளின் மேற்பரப்பை ஆணையம் அடிக்கடி மறுசீரமைக்கிறது.

விரைவுச்சாலைகளில் உள்ள சாலைகளின் மேற்பரப்பு ஏழு முதல் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுசீரமைக்கப்படுகிறது.

முக்கியச் சாலைகளின் மேற்பரப்பு ஒவ்வொரு பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுசீரமைக்கப்படுகிறது.

சிறிய சாலைகளின் மேற்பரப்பு பதினைந்து ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுசீரமைக்கப்படுகிறது.

சாலைகளின் மேற்பரப்பை மறுசீரமைக்கும் முயற்சிகள் 2022ஆம் ஆண்டிலிருந்து நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்