கார் பந்தயம்: மாதுக்கு மரணம் விளைவித்த ஓட்டுநருக்கு ஐந்தாண்டுச் சிறை

1 mins read
1d9a2b53-864b-4220-94ff-cdd866c60644
30 வயது ஜேரட் டீ லீ கியட். - படம்: சின் மின் நாளிதழ்

கார் பந்தயத்தின்போது மோட்டர்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மாதின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டிய ஆடவருக்கு ஐந்து ஆண்டுகள், எட்டு மாதச் சிறைத் தண்டனை ஜூன் 27ஆம் தேதி விதிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் நடந்த அச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த அம்மாது மருத்துவமனையில் உயிரிழந்தார்.

30 வயது ஜேரட் டீ லீ கிட் மோட்டர்சைக்கிளோட்டியான 27 வயது கோவன் டானுடன் பந்தயத்தில் ஈடுபட்டார்.

தமது காரை கிட் மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓட்டியதாகக் கூறப்பட்டது. பந்தயத்தின்போது வேண்டுமென்றே டானின் பாதையை மறித்து, அவரின் வேகத்தைக் கட்டுப்படுத்த கிட் முயன்றதாகச் சொல்லப்பட்டது.

காரில் பயணியர் இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம், மோட்டர்சைக்கிள் பறப்பதை நீங்கள் காண வேண்டுமா எனக் கிட் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிட்டின் கார் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், அதன் ஓட்டுநரான டானும் பின்னால் அமர்ந்திருந்த 18 வயது லீன் லிம் ஜியா லேவும் தூக்கி வீசப்பட்டனர்.

பலத்த காயமடைந்த லிம், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தம்மீது சுமத்தப்பட்ட ஒருவருக்கு மரணம் விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை கிட் ஒப்புகொண்டார்.

சிறைத்தண்டனையுடன் வாகனம் ஓட்ட 10 ஆண்டுகள் தடையும் அவருக்கு விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்