சிங்கப்பூரில் தரை வீடுகள் அமைந்துள்ள கூடுதலான பகுதிகளில் இந்த ஆண்டு (2025) சாலைத் துப்புரவு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்புரவுப் பணிக்கான நேரத்தைக் குறைப்பதோடு மனிதவளத் தேவையைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.
ஏற்கெனவே 33 தனியார் குடியிருப்புப் பேட்டைகளில் இத்தகைய துப்புரவு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டு மேலும் 12 பேட்டைகளில் இந்த நடைமுறை நடப்புக்கு வரும்.
தேசியச் சுற்றுப்புற வாரியம் 2019ஆம் ஆண்டு இந்த நடைமுறையைத் தொடங்கியது.
சாலையின் மறுபக்கம் வாகனம் நிறுத்தும் திட்டத்தின் (Alternate Roadside Parking) ஓர் அங்கமாக இந்த நடைமுறை தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் துப்புரவுப் பணிக்காக, குடியிருப்பாளர்கள் சில நாள்களில் சாலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வாகனங்களை நிறுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இதன் மூலம் துப்புரவு வாகனங்கள் சாலையின் மறுபக்கத்தில் இடையூறின்றி அவற்றின் பணியை மேற்கொள்ளலாம்.
பின்னர், அடுத்துத் திட்டமிடப்பட்டுள்ள துப்புரவு நாளில் சாலையின் அடுத்த பக்கம் குடியிருப்பாளர்கள் வாகனங்களை நிறுத்துவர். வாகனம் சாலையின் மற்றொரு பக்கத்தைத் தூய்மைப்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
2019ஆம் ஆண்டுக்கு முன்னர், தனியார் தரை வீட்டுப் பகுதிச் சாலைகள் அனைத்தையும் துப்புரவு ஊழியர்களே தூய்மைப்படுத்தினர்.
வாகனங்களைப் பயன்படுத்தும் புதிய துப்புரவு முறையின்கீழ் சாலையைத் தூய்மையாக்குவதற்கான நேரம் 50 முதல் 80 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
புக்கிட் தீமா வட்டாரத்தின் மேஃபேர் பார்க் குடியிருப்புப் பகுதியிலுள்ள ஜாலான் வாஜெக் கிட்டத்தட்ட 300 மீட்டர் நீளமானது. இதைச் சாலைத் துப்புரவு வாகனம் மூலம் தூய்மைப்படுத்த ஏறக்குறைய 20 நிமிடங்கள் தேவைப்படுவதாகக் கூறப்பட்டது. வாகனத்தை ஓட்டுபவரோடு சேர்த்து மூன்று ஊழியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
2021ஆம் ஆண்டு புதிய துப்புரவு முறை இந்தக் குடியிருப்புப் பேட்டையில் அறிமுகமானது. அதற்கு முன்னர் சாலையைத் தூய்மைப்படுத்த ஏறக்குறைய ஒரு மணி நேரம் பிடித்தது. நான்கு முதல் ஆறு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
குடியிருப்பாளர்கள் எப்போதும் சாலையின் இடப்பக்கமாக வாகனங்களை நிறுத்திப் பழகிவிட்டதால் துப்புரவுக்குத் திட்டமிட்ட நாள்களில் சிலர் எந்தப் பக்கம் நிறுத்தவேண்டும் என்பதை மறந்துவிடுவதாகச் சிலர் கூறினர்.
இருப்பினும் வாரியமும் அக்கம்பக்கக் குழுவும் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டும் முயற்சியை மேற்கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஏறத்தாழ 60 முதல் 70 விழுக்காட்டுக் குடியிருப்பாளர்கள் ஆலோசனைக் குறிப்புகளைப் பின்பற்றி, சாலையின் சரியான பக்கத்தில் வாகனங்களை நிறுத்துவதாகத் தெரிகிறது. தவறுவோர் மீது அமலாக்க நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

