சாலைப் போக்குவரத்துக்கு எதிர்திசையில் கார் ஓட்டிச் சென்ற 45 வயது ஆடவரைப் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் நிறுத்தச் சொல்லியும் அவர் வாகனத்தைத் தொடர்ந்து செலுத்தினார்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை (பிப்ரவரி 15) இரவு 9.50 மணியளவில் புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் உள்ள பாங்கிட் சாலையில் நிகழ்ந்தது.
ஆடவர் ஒட்டிச் சென்ற காரை ஏறத்தாழ 5 கிலோமீட்டர் தூரத்துக்கு காவல்துறையினர் துரத்திச் சென்றனர்.
இறுதியில் அந்த ஆடவர் சுவா சூ காங் அவென்யூ 4ல் கைது செய்யப்பட்டார்.
அபாயகரமாக கார் ஓட்டிய குற்றத்துக்காக அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது, வாகன ஓட்டுநர் உரிமமும், வாகனத்துக்கான காப்புறுதித் திட்டமும் இல்லாமல் அந்த ஆடவர் கார் ஓட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாகனத்தை நிறுத்தச் சொல்லியும் அவர் நிறுத்தாமல் காரைத் தொடர்ந்து ஓட்டிச் சென்றதைக் காவல்துறை சுட்டியது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.