பெண்ணிடம் கைவரிசை; சீன ஆடவர் மூவர்மீது கொள்ளைக் குற்றச்சாட்டு

பெண்ணிடம் கைவரிசை; சீன ஆடவர் மூவர்மீது கொள்ளைக் குற்றச்சாட்டு

படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

03 Jun 2026 - 3:48 pm

2 mins read

மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டலில் 45 வயதுப் பெண்ணிடம் பணம் பறித்ததாக நம்பப்படும் மூவர்மீது நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூன் 3) குற்றஞ்சாட்டப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த 34 வயது டூ காய், 29 வயது லீ யீ, 30 வயது ரென் ஜீலியாங் ஆகியோர் அப்பெண்ணுக்குக் காயம் ஏற்படுத்தி, அவரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்த குற்றத்தை எதிர்நோக்குகின்றனர்.

அந்த மூவரையும் விசாரணைக்காக ஒரு வாரத் தடுப்புக் காவலில் வைக்கும்படி அரசாங்க வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

வெளிநாட்டு நாணயப் பரிமாற்றச் சேவைகளை வழங்குவதாகக் கூறிய ஒருவரைப் பாதிக்கப்பட்ட பெண் குறுஞ்செயலித் தளம் மூலம் அறிந்துகொண்டதாக ஜூன் 2ஆம் தேதி காவல்துறை அறிக்கை வெளியிட்டது.

அந்தப் பெண் $50,000 ரொக்கத்தை வெளிநாட்டுப் பணமாக மாற்ற முற்பட்டிருந்தார்.

அதையடுத்து பேஃப்ரண்ட் அவென்யூ வட்டாரத்துக்குத் தமது மகளுடன் சென்ற பெண், மரினா மே சேன்ட்ஸ் ஹோட்டலின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்குப் பணத்தை அந்தப் பெண் வெளியில் எடுத்தபோது ஆடவர் ஒருவர் அவரது கழுத்தைப் பிடித்தவாறு ரொக்கத்தை ஒப்படைக்கும்படி கூறினார்.

பின்னர், பெண்ணும் அவரது மகளும் அறையின் மாடிமுகப்பில் வைத்துப் பூட்டப்பட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஆடவர் மூவரும் ‌‌ஷாங்காய்க்குப் புறப்பட்ட விமானத்தில் இருந்ததைக் காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

ஆடவர் இருந்த விமானம் நுழைவாயிலுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மூவரும் சாங்கி விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

ஆடவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டதை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்தவர்களுக்குக் காயம் விளைவித்து கொள்ளையடித்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஐந்தாண்டிலிருந்து 20 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும். அத்தகையோருக்குக் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

ஆடவரின் வழக்கு விசாரணை இம்மாதம் 10ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
கொள்ளைரொக்கம்மரினா பே சேண்ட்ஸ்