மெரினா பே சேண்ட்ஸ் ஹோட்டல் அறை ஒன்றில் 45 வயது பெண்ணிடம் கொள்ளையடித்து, அவரையும் அவரது குழந்தையையும் பால்கனியில் பூட்டிவிட்டுத் தப்பிச் சென்ற மூன்று சீன நாட்டவர்களை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திங்கட்கிழமையன்று (ஜூன் 1)இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இது குறித்து செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 2) காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டனர். திங்கட்கிழமை (ஜூன் 1) இரவு 7 மணியளவில் பேஃபிரண்ட் அவென்யூ பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 29 வயதிலிருந்து 34 வயது வரையிலான அந்த மூன்று ஆண்களும் தப்பியோட முயன்ற சில மணி நேரங்களிலேயே பிடிபட்டனர்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண், குறுந்தகவல் செயலி ஒன்றின் வழியாக அந்நியச் செலாவணி மாற்றுச் சேவை வழங்குவதாகக் கூறிக்கொண்ட நபர் ஒருவருடன் பழகியுள்ளார். $50,000 ரொக்கப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அதற்கு நிகரான வெளிநாட்டு நாணயத்தைத் தனது மின்னிலக்கப் பணப்பையில் பெற்றுக்கொள்ள அப்பெண்மணி ஒப்புக்கொண்டார்.
அந்த ஆடவரின் அறிவுறுத்தலின்படி, தனது குழந்தையுடன் $50,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு அவர் பேஃப்ரண்ட் அவென்யூ பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைச் சந்தித்த ஆடவர் ஒருவர் அவர்களை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மற்றொருவர் குளியலறையில் மறைந்திருந்தார்.
பெண்மணி தனது கையில் இருந்த பணத்தை வெளியே எடுத்தவுடன், அந்த ஆடவர்களில் ஒருவர் பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெரித்து பணத்தைப் பறித்துள்ளார். பின்னர், தாயையும் குழந்தையையும் அந்த அறையின் பால்கனியில் வைத்துப் பூட்டிவிட்டு தப்பியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தாய்க்கும் சேய்க்கும் இலேசான காயங்கள் ஏற்பட்டன.
விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், சந்தேக நபர்கள் மூவரும் சாங்கி விமான நிலையத்திலிருந்து ஷங்காய் நோக்கிச் செல்லவிருந்த விமானம் ஒன்றில் ஏறியதை உடனடியாகக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, புறப்படவிருந்த அந்த விமானம் உடனடியாக திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து $50,000 ரொக்கப் பணம் முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் புதன்கிழமையன்று (ஜூன் 3) நீதிமன்றத்தில் காயத்தை ஏற்படுத்திக் கொள்ளையடித்ததாகக் குற்றச்சாட்டு சுமத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன், 12 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.

