ரோபோடாக்சிகள் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு முதலில் வரலாம்

2 mins read
4c4caa91-1cd0-4bff-8c74-54f2c9a4dbcf
கிராப் நிறுவனம், அடுத்த ஆண்டு பொங்கோல் குடியிருப்பு வட்டாரத்தில் இடைவழிச் சேவையாக தானியங்கி வாகன சேவையை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: கிராப்

சீனா, அமெரிக்கத் தெருக்களில் வலம் வரும் ரோபோடாக்சிகள் சிங்கப்பூரிலும் ஒரு போக்குவரத்துத் தேர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவில் ரோபோடாக்சிகள் சிங்கப்பூரில் முதலில் அறிமுகமாகும் என கணிக்கப்படுகிறது.

வியட்னாம், மலேசியா போன்ற நாடுகள் தானியங்கி வாகனங்களைச் சோதித்து வருகின்றன என்றாலும் செலவு, மனிதவளம், உள்கட்டமைப்பு போன்ற காரணிகள் வணிக ரோபோடாக்சி சேவையைத் தாமதமாக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சிங்கப்பூர் தவிர்த்து, தென்கிழக்கு ஆசியாவில் ஊழியர் செலவு குறைவாக இருப்பதாக போக்குவரத்து பொருளியல் குறித்து ஆய்வு செய்யும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரான திமோதி வோங் தெரிவித்தார்.

இது தானியங்கி வாகனங்களில் முதலீடு செய்வதற்கு அதிகம் தூண்டாது. ஏனெனில் மனித ஓட்டுநரைக் கொண்டிருப்பது செலவு குறைவானதாக இருக்கும்.

சிங்கப்பூர் டாக்சி சேவையின், மூப்படையும் மக்கள் தொகை, டாக்சி ஓட்டுநர்களின் எண்ணிக்கை சுருங்கி வருவது போன்ற சாவல்களை ரோபோடாக்சிகள் ஈடு செய்யும் என திரு வோங் கருதுகிறார்.

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட கம்ஃபர்ட்டெல்குரோ, கிராப் நிறுவனங்கள் பொங்கோல் குடியிருப்பு வட்டாரத்தில் அதனதன் ரோபோடாக்சிகளின் சோதனைகளை நடத்துகின்றன. அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் பொங்கோலில் இடைவழிச் சேவையாக அவற்றின் தானியங்கி வாகனச் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.

வணிகச் சேவைகள் 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தானியங்கி வாகனங்களின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 முதல் 150 வரை விரிவுபடுத்துவது நோக்கம் என்று இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் முன்னதாகக் கூறியிருந்தார்.

இதில், மனிதவளம், செலவு ஆகியவற்றுக்கு அப்பால், உள்கட்டமைப்பும் முக்கியமானது.

“சிங்கப்பூருக்கு வெளியே, தென்கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளில் தானியங்கி வாகனங்கள் சேவையில் இடம்பெறலாம்” என்று திரு வோங் கூறினார்.

செலவும் மக்கள் தொகையும் சிங்கப்பூரைப் போலவே இருக்கும் ஹாங்காங், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் வணிக ரோபோடாக்சி சேவைகள் முதலில் கிடைக்கும் என்று அவர் கருதுகிறார்.

“தொழில்நுட்பம் மற்ற நகரங்களில் நன்கு சோதிக்கப்பட்டு, நம்பகத்தன்மை ஏற்பட்டால் அது தென்கிழக்கு ஆசியாவின் மற்ற பகுதிகளில் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் செயல்படுத்தக்கூடும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்