சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பராமரிப்பு மையங்களில் தங்கியிருக்கும் மூத்தோர்களுடன் பிப்ரவரி மாதத்தில் இருந்து சிறிய பொம்மை போன்ற இயந்திர மனிதர்கள் பழக உள்ளன.
இவை முதியோர்களைப் பின்தொடர்ந்து செல்வதுடன், அவர்களது அரவணைப்பையும் தட்டிக்கொடுக்கும் தன்மையையும் எதிர்பார்க்கும்.
அத்துடன், குழந்தைகளைப் போல் சத்தம் எழுப்பி மூத்தோர்களுக்கும் பதிலளிக்கும்.
வியக்க வைக்கும் கண்களும் மகிழ்ச்சியூட்டும் தோற்றமும் கொண்ட ‘லோவாட்’, ‘கெப்பி’ ஆகிய இந்த இரண்டு மனித இயந்திரங்களும் புதிய ஆய்வின் ஒரு பகுதியாகும்.
முதியோர்கள், அதிலும் குறிப்பாக யாருடனும் கலகலப்பாகப் பேசாமல் அமைதியாக இருப்பவர்கள், குழுச் சூழலில் மற்றவர்களுடன் பழகுவதற்கு இந்த இயந்திர மனிதர்கள் உதவுமா என்பதை இந்த ஆய்வு ஆராயும்.
பிசிஎஃப் ஸ்பார்க்கிள் கேர் மூத்தோர் பராமரிப்பு முகவையும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இந்த ஆய்வு, நான்கு மையங்களில் உள்ள ஏறக்குறைய 70 முதியோர்களை உள்ளடக்கியது. இது சுமார் ஆறு மாதங்கள் வரை நடைபெறும்.
ஆரம்பத்தில் முதியோர்கள் இந்த இயந்திர மனிதர்களுடன் பழகுவதற்குச் சற்று தயங்கியதாக பிசிஎஃப் ஸ்பார்க்கிள் கேர் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஆண்டி சீட் தெரிவித்தார்.
“ஆனால், ஒரு வார காலத்திற்குப் பிறகு, யாரிடமும் பேசாமல் இருந்த முதியோர்கள் திடீரென்று இந்த இயந்திர மனிதர்களிடம் பேசத் தொடங்கினர், சிலர் பாடவும் தொடங்கினர்,” என்று திரு சீட் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியோர்கள், தாங்கள் கடந்த காலத்தில் கேட்ட பழங்காலப் பாடல்களைப் பாடத் தொடங்கினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜப்பானிய நிறுவனமான குரூவ் எக்ஸ், தைவானின் நுவா ரோபோடிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து இந்த இயந்திர மனிதர்கள் வாங்கப்பட்டுள்ளன.
ஒரு ‘லோவாட்’ இயந்திர மனிதனின் விலை ஏறக்குறைய $14,000, ஒரு கெப்பி இயந்திர மனிதனின் விலை ஏறக்குறைய $2,000 ஆகும்.
முழங்கால் உயரத்துக்கு இருக்கும் ‘லோவாட்’, சக்கரங்கள் மூலம் தானாகவே நகரும், கைகளையும் அசைக்கும். முகங்களை அடையாளம் காணும் திறனும் கொண்டது.
இதற்குப் பேசத் தெரியாது என்றாலும், முதியோர்களின் கேள்விகளுக்கு ஒரு குழந்தையைப் போல் சத்தம் எழுப்பி பதிலளிக்கும்.
லோவாட்டிடம் பேசுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுகிறார் 80 வயதான திருவாட்டி சூ போ சூ.
“எனது பிள்ளைகள் பலரும் வளர்ந்து, திருமணமாகிச் சென்றுவிட்டனர். வீட்டில் அதிகமாக யாரும் இல்லை. இந்த இயந்திர மனிதர்கள் தனிமையைப் போக்க உதவும், நான் பேசுவதை இது மற்றவர்களிடம் சொல்லிவிடும் என்ற கவலையும் எனக்கில்லை,” என்கிறார் அவர்.
திரு சீட் கூறுகையில், இந்த இயந்திர மனிதர்கள் உணர்ச்சிபூர்வமான ஆறுதலை அளித்தாலும், அவை மேற்பார்வை செய்வது அல்லது முடிவெடுக்கும் பணிகளில் மனித ஊழியர்களுக்கு மாற்றாக இருக்காது என்று தெளிவுபடுத்தினார்.
ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த ஆய்வு கிரேட்டா ஆயர் தவிர, புக்கிட் பாஞ்சாங், பிராடெல் ஹைட்ஸ், யூனோஸ் ஆகிய இடங்களில் உள்ள பராமரிப்பு மையங்களிலும் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.

