ரோச்சோர் பகுதியில் செப்டம்பர் 12ஆம் தேதி மாலையில் கார், மின்சைக்கிள், பேருந்து ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்து ஒன்று நடந்தது.
அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் உட்கொண்டு காட் ஓட்டியதற்காக 31 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
மிடில் ரோட்டில் சோஃபியா ரோட்டை நோக்கிச் செல்லும் பாதையில் நடந்த விபத்து குறித்து சம்பவம் நடந்த தினத்தன்று மாலை 6.45 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.
பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தபோது, சேவை எண் 56 கொண்ட பேருந்தின் பின்பகுதியில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேச்சாளர் கிரேஸ் வூ கூறினார்.
மின்சைக்கிள் ஓட்டிய 32 வயது ஆடவரும் 65 வயது பெண் பேருந்துப் பயணியும் சுயநினைவுடன் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஐந்து பேருந்துப் பயணிகளுக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன; இருப்பினும் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.
எஞ்சிய பயணிகள் தங்களது பயணத்தைத் தொடர வேறு பேருந்திற்கு மாற்றப்பட்டதாக திருவாட்டி வூ குறிப்பிட்டார்.
கார் ஓட்டுநருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டபோதிலும் அவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் கூறிய காவல்துறை, போதைப்பொருள் பயன்படுத்திக் காரை ஓட்டியதற்காக அவர் பின்னர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.
மேலும், அந்த ஓட்டுநரிடம் மின்சிகரெட் ஒன்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மின்சிகரெட் தொடர்பான குற்றச்செயல் சுகாதார அறிவியல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

