தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடக்கு - தெற்குப் பாதையில் மூன்று கலாசார மாவட்டங்களை இணைக்கும் ரோச்சோர் பொதுவெளி கட்டப்படும்

2 mins read
d9e073e3-adff-4451-a1ba-056839b0e0d0
ஓவியரின் சித்திரிப்பில் மேரிமவுண்ட் ரோட்டில் பசுமையாகக் காட்சியளிக்கும் தாவரங்கள். - படம்: ஹென்னிங் லார்சென்

ரோச்சோர் கெனல் ரோடு, சுங்கை ரோடு, ஜாலான் புசார் சந்திப்பில் மூன்று கலாசார மாவட்டங்களையும் அருகிலுள்ள கல்வி நிலையங்களையும் இணைக்கும் பொதுவெளி ஒன்று கட்டப்படக்கூடும்.

லிட்டில் இந்தியா, கம்போங் கிளாம், வாட்டர்லூ ஸ்திரீட் ஆகிய கலாசார மாவட்டங்களையும் லாசால் கலைக் கல்லூரி, நன்யாங் நுண்கலைக் கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகியவற்றையும் அது இணைக்கும்.

வடக்கு - தெற்குப் பாதையின் 21.5 கிலோமீட்டர் நீள தரைவழிப் பாதையில் அமைப்பதற்காக ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் இதுவும் அடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகஸ்ட் 27ஆம் தேதி தெரிவித்தது.

ரோச்சோர் ரோட்டைச் சுற்றிலும் நடைப் பயிற்சி, சைக்கிளோட்டம் போன்றவை தொடர்பில் மேம்பட்ட அனுபவத்தை இந்தப் பொதுவெளி வழங்கும்.

அத்துடன் லிட்டில் இந்தியா, கம்போங் கிளாம், வாட்டர்லூ ஸ்திரீட் ஆகியவற்றுக்கிடையே மேம்பட்ட தொடர்பையும் இது ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டது.

கம்போங் கிளாம் பகுதிக்கு அருகில் உள்ள ஓஃபிர் ரோட்டின் ஒரு பகுதி இனி நடந்துசெல்வோருக்கு மட்டுமானதாக மாற்றப்படும். மரபுடைமையையும் கலாசாரத்தையும் போற்றும் நிகழ்ச்சிகள், நடவடிக்கைகளுக்கான இடமாக அது விளங்கும். கம்போங் கிளாமை பூகிசுடன் அது இணைக்கும் என்று ஆணையம் கூறியது.

கம்போங் கிளாமுக்கு அருகில் உள்ள ஓஃபிர் ரோட்டின் ஒரு பகுதி நடந்து செல்வோருக்கு மட்டுமானதாக மாற்றப்படும்.
கம்போங் கிளாமுக்கு அருகில் உள்ள ஓஃபிர் ரோட்டின் ஒரு பகுதி நடந்து செல்வோருக்கு மட்டுமானதாக மாற்றப்படும். - படம்: ஹென்னிங் லார்சென்

நிலவனப்புக் கட்டடக்கலை நிறுவனமான ஹென்னிங் லார்சென் இந்த யோசனைகளை முன்வைத்தது. வடக்கு - தெற்குப் பாதையின் மேற்புறச் சாலைகளுக்கான பெருந்திட்டம் தொடர்பில் ஆலோசகராக அந்நிறுவனமும் அதன் பங்காளித்துவ நிறுவனங்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் சொல்லிற்று.

பரிந்துரைக்கப்படும் பொதுவெளி, லிட்டில் இந்தியா, கம்போங் கிளாம், வாட்டர்லூ ஸ்திரீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்படும்.
பரிந்துரைக்கப்படும் பொதுவெளி, லிட்டில் இந்தியா, கம்போங் கிளாம், வாட்டர்லூ ஸ்திரீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்படும். - படம்: ஹென்னிங் லார்சென்

வடக்கு - தெற்குப் பாதையில் நான்கு தனித்துவமான பிரிவுகளை அமைக்க நிறுவனம் ஆலோசனை கூறியுள்ளது.

ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள சமுதாய-தொழில்துறை பகுதி, ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள சூழலியல் தடம், ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள மக்கள் நல்வாழ்வுப் பாதை, 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள கலாசார-மரபுடைமைப் பாதை ஆகியவை அவை.

அந்த நான்கு பிரிவுகளிலும் மொத்தம் 20க்கு மேற்பட்ட பொதுவெளிகள் அமைந்திருக்கும் என்றும் அவை அந்தப் பகுதியின் அக்கம்பக்க வட்டாரங்களின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

அங் மோ கியோவில் ‘லைஃப் ரிசர்வ்’ எனும் உயிர் ஒதுக்குநிலப் பகுதியை அமைக்கவும் ஹென்னிங் லார்சென் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

பீஷான் - அங் மோ கியோ பூங்காவிற்கு அருகிலுள்ள மேரிமவுண்ட் ரோட்டின் சாலைப் பகுதிகள், மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்கும் விதமாகப் பசுமையான தாவரங்களைக் கொண்டிருக்கும்.
பீஷான் - அங் மோ கியோ பூங்காவிற்கு அருகிலுள்ள மேரிமவுண்ட் ரோட்டின் சாலைப் பகுதிகள், மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்கும் விதமாகப் பசுமையான தாவரங்களைக் கொண்டிருக்கும். - படம்: ஹென்னிங் லார்சென்

அதன்கீழ், இயற்கை சார்ந்த பொதுவெளிகள், பசுமையான சைக்கிளோட்டப் பாதைகள், நடைபாதைகள், விளையாட்டு இடங்கள் அமைக்கப்படுவதோடு வடக்கு - தெற்குப் பாதையை பீஷான்-அங் மோ கியோ பூங்காவோடு அவை இணைக்கும்.

மேம்பாலத்துக்குக்கீழ் உள்ள பகுதிகளை சைக்கிளோட்டத்திற்கும் பொதுமக்களுக்கான இருக்கைகள், விளையாட்டு இடங்களை அமைக்கவும் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்துக்குக்கீழ் உள்ள பகுதிகளை சைக்கிளோட்டத்திற்கும் பொதுமக்களுக்கான இருக்கைகள், விளையாட்டு இடங்களை அமைக்கவும் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. - படம்: ஹென்னிங் லார்சென்

அட்மிரல்டி முதல் ரோச்சோர் வரையிலான வடக்கு - தெற்குப் பாதையில், வடக்கே 8.8 கிலோமீட்டர் விரைவுச்சாலை மேம்பாலமும் தெற்கே 12.3 கிலோமீட்டர் சுரங்கப் பாதைகளும் அமைந்திருக்கும்.

அந்தப் பாதை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, உட்லண்ட்ஸ், செம்பவாங், ஈசூன், அங் மோ கியோ போன்றவற்றிலிருந்து நகருக்குச் செல்லும் பயண நேரத்தை 30 நிமிடங்கள் வரை குறைக்க உதவும். கிட்டத்தட்ட 30 காற்பந்துத் திடல்களுக்குச் சமமான நிலப்பரப்பை மற்ற பயனாளர்களுக்கு ஒதுக்கவும் அது உதவும்.

குறிப்புச் சொற்கள்