தொழில்முறை சாராத வழக்கறிஞர்கள் உட்பட அனைத்து வழக்கறிஞர்களும் சட்ட நடைமுறைகள் சரிவர செயல்படுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறியுள்ளார்.
தவறான கணிப்புகளால் சட்ட நிபுணர்கள்மீதும் சட்டக் கட்டமைப்புகள்மீதும் பொதுமக்கள் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த நம்பிக்கையும் பாதிக்கப்படும் என்றார் அவர்.
தொழில்முறை சாராத வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது; அவர்கள் சட்ட சேவை நாடுவோருக்கு ஆலோசனையும் வழங்க முடியாது. அத்தகையோர் நிறுவனங்களில் உள்ள சட்டப் பிரிவில் அல்லது கற்பித்தல் துறையில் சேரலாம்.
அண்மை காலங்களில் சட்ட நடைமுறைகள் அதிகம் குறைகூறப்படுவதால் தலைமை நீதிபதி மேனன் சட்டத்துறை மீதான நம்பிக்கையைக் காட்டிகாப்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.
சட்டத்துறைப் பட்டதாரிகளுக்கு வாழ்க்கைத்தொழிலில் இன்னும் கூடுதல் நீக்குப்போக்கை வழங்கும் புதிய கட்டமைப்பின்கீழ் உள்ள வழக்கறிஞர் சங்கத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) முதல் தொகுதி வழக்கறிஞர்கள் சேர்ந்தனர். தலைமை நீதிபதி மேனன் அவர்களிடம் உரையாற்றினார்.
இதற்குமுன், சட்டத்துறைப் பட்டதாரிகள் பயிற்சி செய்யும் வழக்கறிஞர்களாக வழக்கறிஞர் சங்கத்தில் சேர சங்கத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு சட்ட நிறுவனத்தில் அவர்கள் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றிருப்பதும் அவசியம்.
புதிய கட்டமைப்பின்கீழ் சங்கத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் தொழில்முறை சாராத வழக்கறிஞராக வழக்கறிஞர் சங்கத்தில் சேரலாம்.
தொழில்முறையில் ஈடுபட விரும்பும் வழக்கறிஞர்கள் மட்டும் சட்ட நிறுவனத்தில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அந்தப் பயிற்சி காலம் தற்போது ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இளம் வழக்கறிஞர்களுக்கான நிபுணத்துவ பயிற்சிகளை மறுஆய்வு செய்ய 2016ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு முன்வைத்த அறிக்கையின் அடிப்படையில் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டதை திரு மேனன் சுட்டினார்.
வழக்கறிஞர் சங்கத்தில் சேர்வதையும் சட்ட நிறுவனத்தில் பயிற்சிப் பெறுவதையும் பிரிக்க வேண்டும் என்பது குழு முன்வைத்த முக்கிய பரிந்துரைகளில் ஒன்று.
இது சட்டத்துறைப் பட்டதாரிகளுக்கு இன்னும் நீக்குப்போக்கான வாழ்க்கைதொழில் வாய்ப்புகளைத் தரும் என்றார் அவர்.

