சிங்கப்பூரிலுள்ள சக வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஒரு பண்பாட்டு நிகழ்வையும் நூலகத்தையும் ஏற்படுத்திய பங்ளாதேஷ் ஊழியர் ஃபஸ்லி இலாஹி புற்றுநோயால் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) உயிரிழந்தார். இவருக்கு வயது 38.
ருபெல் எனத் தம் நண்பர்களால் அழைக்கப்பட்ட திரு ஃபஸ்லி பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது 2022ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
புற்றுநோயை எதிர்த்துப் போராடியபோதும், தாய்நாட்டிற்குத் திரும்புமுன் கடந்த ஆண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான பண்பாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்ய அவர் உதவினார்.
தான் ஒருநாள் மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பி வருவேன் என்றும் அப்போது, வெளிநாட்டு ஊழியர்களை இன்னும் சிறப்பாக நடத்தக் கற்றுக்கொண்டுள்ள சிங்கப்பூரைக் காண்பேன் என்றும் சிங்கப்பூரைவிட்டுக் கிளம்புமுன் அவர் சொன்னதாக சிஎன்ஏ செய்தி தெரிவித்தது.
தமது சிரமமான நாள்களில் தமக்கு உதவிய நண்பர்களை ஒருகாலும் மறக்கமாட்டேன் என்று அவர் கூறியிருந்தார்.
இந்தியாவில் அவர் சிகிச்சை பெறவும் ஒருவேளை அவர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தின் வருமானத்திற்காகவும் சிங்கப்பூரர்கள் பலரும் நிதிதிரட்டு முயற்சியில் கைகொடுத்தனர்.
“திரு ஃபஸ்லி ஊர் திரும்பவும் கடந்த 18 மாதங்களில் அவர் தம் குடும்பத்தினருடன், குறிப்பாக மகன் ரிஹானுடன் நேரம் செலவிடவும் உதவும் வகையில் நிதிதிரட்டிய அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்,” என்று முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியா ஓங் தெரிவித்தார்.
திருவாட்டி ஓங் கடந்த 2017ஆம் ஆண்டில் முதன்முறையாகத் திரு ஃபஸ்லியைச் சந்தித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“வெளிநாட்டு ஊழியர்களுக்கான ‘கிரிட்டிகேர்’ நிதியைத் தொடங்க ருபெல் மிகுந்த ஊக்குவிப்பாகத் திகழ்ந்தார். அதன்மூலம் சிங்கப்பூரையும் வெளிநாட்டு ஊழியர் சமூகத்தையும் நேசிப்பதில் அவர் விட்டுச்சென்ற மரபு தொடரும்,” என்றார் திருவாட்டி ஓங்.
பங்ளாதேஷின் நொவகாளி மாவட்டத்தில் பிறந்தவரான திரு ஃபஸ்லி, கடந்த 2009 செப்டம்பரில் முதன்முறையாகச் சிங்கப்பூருக்கு வந்தார்.
சில லாப நோக்கமற்ற அமைப்புகளைச் சந்தித்த பிறகு கடந்த 2015இல் இங்கு அவர் தமது சமூகநலப் பணிகளைத் தொடங்கினார்.
முதலாவதாக, 2017இல் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நூலகத்தை அவர் இங்கு தொடங்கினார். அதற்கு மறுஆண்டில், ஆடல், பாடல், கவிதை எனப் பலவற்றிலும் ஆர்வமாக உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கென ஆண்டுதோறும் இடம்பெறும் ஒரு பண்பாட்டு நிகழ்வை அவர் அறிமுகம் செய்தார்.
“நாமும் ஏற்பாட்டாளராகத் திகழ முடியும் என்ற நம்பிக்கையை வெளிநாட்டு ஊழியர்களிடம் திரு ஃபஸ்லி ஏற்படுத்தினார். நமக்கு நாமே தலைவர்களாக விளங்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் விதைத்தார்,” என்று பண்பாட்டு நிகழ்வை அவருடன் இணைந்து தொடங்கிய திரு அக் ஸிலானி கூறினார்.
திரு ஃபஸ்லி தமக்குச் சகோதரர் போன்றவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

