திருமணப் பதிவகமும், முஸ்லிம் திருமணங்கள் பதிவகமும் 2029ஆம் ஆண்டில் மீண்டும் கேனிங் ரைஸ் கட்டடத்தில் செயல்படவுள்ளதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நான்கு ஆண்டுகால மறுசீரமைப்புப் பணிகள் நிறைவுற்ற பிறகு கேனிங் ரைசில் அமைந்திருக்கும் புதிய கட்டடத்தில் அவை செயல்படத் தொடங்கும்.
மறுசீரமைக்கப்பட்ட கேனிங் ரைஸ் வளாகத்தில் அதன் முந்தைய பரப்பளவைவிட 60 விழுக்காடு கூடுதலான இடவசதி இருக்கும். அதாவது 3,755 சதுர மீட்டர் மொத்தத் தளப் பரப்பளவை அது கொண்டிருக்கும். ஃபோர்ட் கேனிங் பூங்காவின் இயற்கைச் சூழலோடு ஒருங்கிணைந்த வகையில் திருமணப் பதிவுச் சடங்குகளுக்காகப் பெரிய, மேம்படுத்தப்பட்ட இடவசதிகள் அதில் அமைந்திருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) ஃபேர்மோன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற ‘கோல்டன் ஜூபிலி’ திருமண விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் மசகோஸ் இத்தகவலை அறிவித்தார்.
திருமணமாகி 50 ஆண்டுகள் அல்லது அதற்குமேல் நிறைவுசெய்த தம்பதியரைக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்கு முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், உள்துறைக்கான மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் வருகை தந்திருந்தார்.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 184 தம்பதியர்க்குச் சான்றிதழ், தங்கப் பதக்கம், வாழ்த்துக் குறிப்பு, புகைப்பட நினைவுப் பரிசு ஆகியவற்றை உள்ளடக்கிய பொன் விழா நினைவுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
அத்தம்பதியர் 50 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பு தாங்கள் எடுத்துக்கொண்ட திருமண உறுதிமொழிகளைத் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் புதுப்பித்துக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
குடும்பங்கள் தழைத்தோங்குவதற்கு வலுவான திருமணங்களே எப்போதும் அடித்தளமாக இருந்து வந்துள்ளதாக அமைச்சர் மசகோஸ் கூறினார்.
வலுவான குடும்பங்களைக் கொண்டு மிகவும் ஒருங்கிணைந்த, வலிமையான ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்றார் அவர்.
புதுப்பிக்கப்பட்ட இடத்தில் தம்பதியர் தங்கள் திருமணப் பதிவு அனுபவத்தைத் தங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளவும் நீங்கா நினைவுகளை உருவாக்கவும் கூடுதல் தெரிவுகளை எதிர்பார்க்கலாம் என்று அமைச்சர் மசகோஸ் குறிப்பிட்டார்.
மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறும் காலத்தில், திருமண, முஸ்லிம் திருமணங்கள் பதிவுச் சடங்குகள் எஸ்பிளனேட் மாலின் மூன்றாம் தளத்தில் நடைபெற்று வருகின்றன.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திறக்கப்பட்டதிலிருந்து அந்தத் தற்காலிக இடத்தில் கிட்டத்தட்ட 6,000 திருமணப் பதிவுச் சடங்குகள் நடைபெற்றுள்ளன.
புதிய வசதிகள்
கேனிங் ரைஸ் கட்டடத்தின் அசல் கட்டடக்கலை பாணியைப் போற்றும் வகையில் அதன் அடையாளமாகத் திகழும் சாய்வான சட்டக முகப்பு தக்கவைக்கப்படும்.
மறுசீரமைக்கப்பட்ட கட்டடம் மேம்படுத்தப்பட்ட திருமணப் பதிவு இடவசதிகளைக் கொண்டிருக்கும்.
திருமணப் பதிவு ஒதுக்கீடுகளை அதிகரிக்கும் வகையில் இரண்டு தளங்களைக் கொண்ட பின்புற விரிவாக்கம், மரவேலைப்பாடுகள், தோட்டத்தைப் பார்த்தவாறு அமைந்தது போன்ற பின்னணி அலங்காரத் திரையுடன் கூடிய விசாலமான உட்புறத் திருமணப் பதிவு அறைகள் இருக்கும்.
அத்துடன் வெளிப்புறச் சடங்குகளுக்காகக் கட்டடத்தின் மேற்புறத்தில் ஒரு கூரைத் தோட்டம் இடம்பெறும். புகைப்படங்கள் எடுப்பதற்கான எழில்மிகு இடங்களும் அங்கு இருக்கும்.

