தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுநீரக நோயாளிகளுக்குக் கைகொடுக்கும் ரோட்டரி கிளப்

2 mins read
0275f3f1-20dc-4ec5-9051-ec145ed62a28
‘ரோட்டரி கிளப் சிங்கப்பூர்’ அமைப்பின் தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியில், அமைப்பின் உறுப்பினர்களுடன் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா (முன்வரிசை நடுவில்). - படம்: ரோட்டரி கிளப் சிங்கப்பூர்
multi-img1 of 2

இலவச ரத்தச் சுத்திகரிப்புச் (டயாலிசிஸ்) சேவை வழங்கும் புதிய நிலையத்தை ரோட்டரி கிளப் சிங்கப்பூர் இவ்வாண்டு டிசம்பரில் திறக்க இலக்குகொண்டுள்ளது.

தெலுக் குராவ்வில் இருக்கும் ‘வில்லிங் ஹார்ட்ஸ்’ அறநிறுவன வளாகத்தில் அமையும் அந்நிலையத்தில் ஒரே நேரத்தில் 20 பேர், ஒரு நாளுக்கு 60 பேர் ரத்தச் சுத்திகரிப்புச் சேவையைப் பெறலாம். அவர்கள் அதிக ஆதரவு தேவைப்படுவோராக இருக்கவேண்டும்.

‘ரோட்டரி கிளப் சிங்கப்பூர்’ அமைப்பு ஆகஸ்ட் 20ஆம் தேதி நடத்திய தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியின்போது, அதன் 91வது தலைவர் சோனாலி சின்ஹாவும் அவருடைய கணவரும் அமைப்பின் துணைத் தலைவருமான ஸ்ரீகாந்த் வினீத் ஐயங்காரும் அத்திட்டம் குறித்து தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்.

‘ரீனல் ஹெல்த் சர்வீசஸ்’ அறநிறுவனம், நிலையத்தின் அன்றாடச் செயல்பாடுகளைக் கையாளும். நிலையத்திற்கான ரத்தச் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கான செலவு கிட்டத்தட்ட $600,000. அதன் ஒரு பகுதியை உள்ளூரிலேயே ரோட்டரி கிளப் சிங்கப்பூர் திரட்டியுள்ளது; மீதமுள்ள தொகைக்குப் பந்தயப்பிடிப்புக் கழகத்தையும் ரோட்டரி அறக்கட்டளையையும் நாடியுள்ளது.

“சிறுநீரக நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பரிசோதனைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்,” என்று திரு வினீத் கூறினார்.

‘ரோட்டரி கிளப் சிங்கப்பூர்’ அமைப்பின் முதல் இந்தியப் பெண் தலைவரும் 91வது தலைவருமான சோனாலி சின்ஹா, அவருடைய கணவரும் அமைப்பின் துணைத் தலைவருமான வினீத் ஐயங்கார்.
‘ரோட்டரி கிளப் சிங்கப்பூர்’ அமைப்பின் முதல் இந்தியப் பெண் தலைவரும் 91வது தலைவருமான சோனாலி சின்ஹா, அவருடைய கணவரும் அமைப்பின் துணைத் தலைவருமான வினீத் ஐயங்கார். - படம்: ரவி சிங்காரம்

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, ரோட்டரி கிளப்பின் இம்முயற்சியைப் பாராட்டினார்.

“ரோட்டரி கிளப் சிங்கப்பூர், சிங்கப்பூரிலுள்ள ஆகத் தொன்மைவாய்ந்த, ஆகப் பெரிய ரோட்டரி கிளப்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே அவ்வமைப்பால் சிங்கப்பூருக்கு நன்மை விளைந்துள்ளது. சிறுவர் இல்லங்கள், சத்துணவுத் திட்டங்கள், முதியோர் இல்லங்களுக்கு ஆதரவளித்ததோடு, போதைப்பொருள் குற்றம் புரிந்தோருக்குக் காற்பந்துவழி மறுவாழ்வளிக்கும் முயற்சிவழியும் பங்காற்றுகிறீர்கள்.

“1930களிலேயே அவ்வமைப்பு பிரிட்டி‌ஷ் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காகச் சிங்கப்பூரர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கியது. 1948ல் டான் டோக் செங் மருத்துவமனையில் காசநோய் மருத்துவமனையையும் 1969ல் தேசிய சிறுநீரக அறநிறுவனத்தையும் அமைக்கப் பங்களித்தது.

“இன்று, வெளிநாட்டு ஊழியர்களுக்காக மருத்துவப் பரிசோதனைகளை நடத்துகின்றது. சமூக மனப்பான்மை கொண்ட மாணவர்களுக்கு இன்டரேக்ட், ரோட்டரேக்ட் மன்றங்கள் மூலம் ஆதரவு வழங்கப்படுகின்றது,” எனப் பாராட்டினார் திரு சுவா.

2021ல் உணவங்காடி நிலையங்களில் மின்னிலக்கமயமாதல் தொடர்பாக ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்த முன்னோடித் திட்டத்திலும் தான் பங்கேற்றதாக அவர் கூறினார்.

கொவிட்-19 தொற்று பரவியபோது உணவங்காடி நிலைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதனால், இணையம் வழி மக்கள் குழுவாக உணவை வாங்கும் முன்னோடித் திட்டத்தை ரோட்டரி கிளப் சிங்கப்பூர் அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் கடைக்காரர்களிடமிருந்து உணவைப் பெற்று தனிமையில் வாழும் முதியோருக்கு விநியோகித்தது.

தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சிக்குத் தன் மனைவியுடன் வந்திருந்த திரு ஜாம்‌ஷிட் கே மடோரா, 85, “ரோட்டரி கிளப்பின் ஒவ்வொரு சந்திப்பும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது; புதிய மக்களைச் சந்திக்க முடிகிறது,” என்றார். அவருடைய தந்தை ரோட்டரி கிளப்பின் தலைவராக இருந்தவர்.

மனைவி சரீன் உடன் திரு ஜாம்‌ஷிட் கே மடோரா, 85.
மனைவி சரீன் உடன் திரு ஜாம்‌ஷிட் கே மடோரா, 85. - படம்: ரவி சிங்காரம்

கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடைபெற்ற பற்றுறுதி நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் சிங்கப்பூர் உறுப்பினர்கள் 69 பேர் வந்திருந்தனர்.

தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியில் தேசிய தினப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியில் தேசிய தினப் பாடல்கள் இசைக்கப்பட்டன. - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்