உலகப் புகழ்பெற்ற ராயல் கரீபியனின் ‘நேவிகேட்டர் ஆஃப் த சீஸ்’ சொகுசுக் கப்பல் சிங்கப்பூரிலிருந்து கடல்வழிப் பயணச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தவுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் சிங்கப்பூரில் ஆண்டு முழுதும் முழுமையான பயணச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கப்போவதாக அது தெரிவித்தது.
அந்தச் சேவைகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என்று ராயல் கரீபியன் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
பயணிகள் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுப் பல்வேறு நகரங்களுக்கு இரண்டு முதல் ஐந்து இரவுகள் வரையிலான பயணங்களை மேற்கொள்ளலாம்.
வியட்னாம், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குக் கப்பல் செல்லும். பினாங்கு, கோலாலம்பூருக்கு அருகிலுள்ள போர்ட் கிள்ளான், புக்கெட் போன்ற நகரங்களுக்கு அது சென்று அங்குச் சிறிது நேரம் இருந்துவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடரும்.
இந்த முன்னணிச் சொகுசுக் கப்பல் நிறுவனம் தோக்கியோவிலிருந்து சிங்கப்பூருக்கு 12 இரவுகள் கொண்ட பயணத்தையும் வழங்குகிறது.
“’நேவிகேட்டர் ஆஃப் தி சீஸ்’ கப்பல் சேவையை ஆறு மாதப் பயணத்திலிருந்து ஆண்டு முழுதும் நீட்டிக்க ராயல் கரீபியன் எடுத்த முடிவு, ஆசியாவின் முன்னணி சொகுசுக் கப்பல் நடுவமாகச் சிங்கப்பூர் மீது அவர்கள் தொடர்ந்து வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது,” என்று சிங்கப்பூர்ச் சுற்றுப்பயணக் கழகத்தின் சொகுசுக் கப்பல் பிரிவு இயக்குநர் சித்ரா ராஜேஷ் குமார் கூறினார்.
“சிங்கப்பூருக்கும் ராயல் கரீபியனுக்கும் இடையிலான நீண்டகாலப் பங்காளித்துவத்துக்கு இந்த நீட்டிப்பு ஒரு சான்று. மேலும், இது சுற்றுப்பயணிகளுக்குச் சிங்கப்பூரில் துடிப்பான அனுபவங்களைப் பெறவும் தென்கிழக்காசியாவின் வளமான சூழலை ஆராயவும் ஒரே பயணத்தில் வாய்ப்புகளை வழங்குகிறது,” என்றார் அவர்.
கப்பலில், பயணிகள் ஏறக்குறைய 245 மீட்டர் நீளம் கொண்ட நீர்ச்சறுக்குடன்கூடிய குழந்தைகள் நீர்ப்பூங்காவை எதிர்பார்க்கலாம். மர்மங்கள் நிறைந்த ‘எஸ்கேப்’ அறை விளையாட்டில் அல்லது இருளில் ஒளிரும் ஒளிக்கற்றை அங்கத்தில் பங்கேற்கலாம்.
விருந்தினர்கள் கரீபியன் பாணியிலான நீச்சல் குளத்தில் குளிர்பானங்களுடன் ஓய்வெடுக்கலாம். திரையரங்கில் அசல் படைப்புகளைக் கண்டு மகிழலாம் அல்லது பனியில் சறுக்கியும் விளையாடலாம்.
இம்மாதம் 21ஆம் தேதி முதல் 23 வரை சிங்கப்பூரின் நாட்டாஸ் பயணக் கண்காட்சியில் ராயல் கரீபியன் இடம்பெறுகிறது.
நேவிகேட்டர் கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர், அதன் இணையத்தளத்தில் இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து பதிந்துகொள்ளலாம்.


