செனாய்- டெசாரு விரைவுச்சாலையில் போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டிய சிங்கப்பூர்ப் பதிவெண் தகடு பொருத்தப்பட்ட காரை மலேசியக் காவல்துறை தேடி வருகிறது.
வாகனம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவான காணொளி, ‘கம்யூனிட்டி ரோடா ஜோகூர்’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூன் 22ஆம் தேதி பகிரப்பட்டது.
விரைவுச்சாலையில் கார் ஒன்று போக்குவரத்துப் பாதையில் செல்வதையும் மற்றொரு கார் போக்குவரத்துக்கு எதிராகச் சாலையின் ஓரத்தில் செல்வதையும் அதில் காண முடிந்தது.
மேலும், போக்குவரத்துக்கு எதிராகச் சென்ற கார் ஒலிப்பானை அடித்துக்கொண்டே கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட காரைக் கடந்துசெல்வதும் அதில் தெரிந்தது.
அந்த வெள்ளை நிற ‘பிவைடி’ கார், சிங்கப்பூர்ப் பதிவெண் தகட்டைக் கொண்டிருந்தது.
மீண்டும் தொல்லை கொடுக்கும் சிங்கப்பூரரின் கார் என்ற தலைப்பில் அந்தக் காணொளி பதிவிடப்பட்டது.
ஜூன் 21ஆம் தேதி காலை 11.30 மணியளவில் அச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அந்த நபர் வாகனம் ஓட்டியதாகவும் வழக்கு விசாரணை நடந்து வருவதாகவும் கோத்தா திங்கி காவல்துறைத் தலைவர் யூசோப் ஓத்மான் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

