சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து சிங்கப்பூரர்கள், வெளிநாட்டவருடன் இரண்டாம் சிங்கப்பூர் ஆகாயப் படை (ஆர்எஸ்ஏஎஃப்) விமானம் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) காலை மணி 5.59க்குப் பாதுகாப்பாக வந்தடைந்தது.
மொத்தம் 81 சிங்கப்பூரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் அந்த ஆர்எஸ்ஏஃப் எம்ஆர்டிடி வகை விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். ஈரான் போர் தொடரும் வேளையில் மத்திய கிழக்கிலிருந்து சிங்கப்பூரர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்காவது விமானம் இது.
சில இடங்களை வர்த்தக விமானங்கள் சென்றடைய முடியாமல் இருப்பதால் சிங்கப்பூரர்களை அழைத்துவர ஆகாயப்படை விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மத்திய கிழக்கிலிருந்து அழைத்துவரப்படும் சிங்கப்பூரர்களில் அவ்வட்டாரத்தில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் அடங்குவர்.
முன்னதாக, சவூதி அரேபியத் தலைநகர் ரியாதிலிருந்து சிங்கப்பூரர்களை அழைத்து வர ஆர்எஸ்ஏஎஃப் விமானம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அவ்விமானம் கடந்த புதன்கிழமை (மார்ச் 11) 218 சிங்கப்பூரர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் அழைத்துவந்தது.
இதுவரை அந்த விமானம்தான் ஆக அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூரர்களை மத்திய கிழக்கிலிருந்து அழைத்து வந்திருக்கிறது.
“சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்ட இரு ஆர்எஸ்ஏஎஃப் எம்ஆர்டிடி விமானங்களில் சிங்கப்பூர் ஆகாயப்படை இதுவரை 299 சிங்கப்பூரர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் வெற்றிகரமாக மத்திய கிழக்கிலிருந்து அழைத்து வந்திருக்கிறது,” என்று தற்காப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூர் வந்தடைந்தோரை வரவேற்கச் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்துக்குச் சென்றிருந்தார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், “இன்று நாடு திரும்பியோரில் 42 மாணவர்களும் அடங்குவர். சிலர் இப்போதுதான் படிப்பைத் தொடங்கி முதல் ஆண்டில் இருக்கின்றனர். வேறு சிலர் இறுதியாண்டில் கல்வியை முடிக்கும் தறுவாயில் இருப்பவர்கள்,” என்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (மூயிஸ்) கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் உதவ பாதிக்கப்பட்ட மாணவர்களைத் தொடர்புகொள்ளும் என்றும் உள்துறை மூத்த துணை அமைச்சருமான இணைப் பேராசிரியர் ஃபைஷால் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் 13ஆம் தேதி அன்று, சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை அளித்த பிறகு, விமானத்தில் கிடைக்கக்கூடிய இருக்கைகள் ஆஸ்திரேலியா, புருணை, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், இலங்கை மற்றும் வியட்னாம் நாட்டினருக்கு நீட்டிக்கப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.
“கடந்த கால நெருக்கடிகளில் சிங்கப்பூரர்கள் வீடு திரும்புவதற்கு மற்ற நாடுகள் எவ்வாறு உதவின என்பது போலவே, இது ஒற்றுமையின் உணர்வில் உள்ளது,” என்றும் அது மேலும் கூறியது.

