தின்பண்டத்தில் ரப்பர் துகள்கள்; மீட்டுக்கொள்ளப்படும் ‘மைலோ பார்’கள்

தின்பண்டத்தில் ரப்பர் துகள்கள்; மீட்டுக்கொள்ளப்படும் ‘மைலோ பார்’கள்

1 mins read
70ef50fc-bd5f-4762-9c3b-323a0f8bfcdd
பாதிக்கப்பட்ட மைலோ தயாரிப்புகளை வாங்கிய பயனீட்டாளர்கள் அவற்றை உட்கொள்ள வேண்டாம் எனச் சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.  - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான ‘மைலோ ஸ்நாக் பார்’ என அழைக்கப்படும் தின்பண்டத்தின் ‘டிப்டு’ (dipped), ‘ஒரிஜினல்’ (original) ஆகிய இரு வகைகளின் குறிப்பிட்ட சில தயாரிப்புகள் திரும்பப் பெறப்படுகின்றன.

அவற்றில் ரப்பர் துண்டுகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால் அவற்றை மீட்டுக்கொள்ளும்படி அந்நிறுவனத்திற்குச் சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை பிப்ரவரி 13ஆம் தேதி அமைப்பு வெளியிட்டது.

நெஸ்லே நிறுவனத்தின் அவ்விரு தின்பண்ட வகைகளைச் சேர்ந்த சில தயாரிப்புகளைத் திரும்பப் பெறும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆஸ்திரேலியாவில் உள்ள அதன் உற்பத்தியாளர் தானாகவே முன்வந்து அவற்றைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, சிங்கப்பூரிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

உணவு விற்பனைச் சட்டத்தின்படி பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களை விற்கக்கூடாது.

பாதிக்கப்பட்ட அந்தத் தயாரிப்புகளை வாங்கிய பயனீட்டாளர்கள் அவற்றை உட்கொள்ள வேண்டாம் எனச் சிங்கப்பூர் உணவு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அந்தத் தயாரிப்புகளை ஏற்கெனவே உட்கொண்டவர்கள், தங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் கவலைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்