விதிமீறிய இந்தியப் பணிப்பெண் சிங்கப்பூரில் வேலை செய்ய தடை

2 mins read
4272d25a-34c9-4b5a-8869-de60c98655c2
அல்கா 2014ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குப் பணிப்பெண்ணாக வந்தார்.  - படம்: அல்கா

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்குப் பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த அல்கா என்னும் 44 வயது மாது, இனி சிங்கப்பூரில் வேலை செய்யமுடியாது.

கடந்த ஜூலை மாதம் அல்கா பொய்யான தகவல் வழங்கிய குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் வேலை அனுமதி விதிமுறைகளை மீறியதாக ஆகஸ்ட் மாதம் மனிதவள அமைச்சு அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தது.

அதன் பின்னர் அல்கா சிங்கப்பூரில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டது. அல்கா ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

பணிப்பெண்ணான அல்கா, வேலை அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது முதலாளியின் வீட்டில் தங்கவில்லை.

தற்போது டெல்லியில் உள்ள அல்கா சிங்கப்பூரில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டது ஏமாற்றம் தருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் தாம் 10 ஆண்டுகளாக வசித்துள்ளதாகவும் கடந்த மாதம் தமக்கு சிங்கப்பூரில் திருமணம் நடந்ததாகவும் அல்கா கூறினார்.

அல்கா 2014ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குப் பணிப்பெண்ணாக வந்தார். 2017ஆம் ஆண்டு அனில் திரிபாதி என்பவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சேர்ந்தார். இருப்பினும், வாரம் சிலமுறை மட்டுமே வேலைக்கு வரவும் தம் காதலருடன் தங்கவும் அல்கா முதலாளியிடம் அனுமதிபெற்றார்.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிராங்கூன் சாலையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்துகொண்டிருந்த அல்கா மனிதவள அமைச்சு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அல்கா மீது பொய்யான தகவல் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதற்கு அவருக்கு 2023ஆம் ஆண்டு 10 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த அல்கா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்