ஷெங் சியோங் பேரங்காடியில் வாடிக்கையாளர்கள் மீது மோதிய தள்ளுவண்டி

ஷெங் சியோங் பேரங்காடியில் வாடிக்கையாளர்கள் மீது மோதிய தள்ளுவண்டி

2 mins read
8fe552b4-5692-4521-bdf2-e41f38d20ef2
கீழ்த்தளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த தானியங்கு பாதையில் இறங்கிய தள்ளுவண்டி, வேகமாக உருண்டது. அந்தத் தானியங்கு பாதையில் நின்றுகொண்டிருந்த மாது ஒருவர் மீது அத்தள்ளுவண்டி மோதியதில் அவர் கீழே விழுந்தார். படம்: SINGAPORE ROAD ACCIDENT/FACEBOOK -

ஈசூனில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடியில், தானியங்கு பாதையில் (travelator) கீழே இறங்கிக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் இருவர் மீது தள்ளுவண்டி ஒன்று மோதிய சம்பவம் கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்தது.

அந்தச் சம்பவத்தைக் காட்டும் சிசிடிவி கேமரா காட்சிகள் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 20) பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் வெளியாகின.

அப்பேரங்காடியில் உள்ள தானியங்கு பாதைக்கு அருகே ஊழியர் ஒருவர், தள்ளுவண்டி ஒன்றிலிருந்து அட்டைப்பெட்டிகளை எடுத்து அவற்றை வெளியே நகர்த்தி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது கேட்பாரற்று கிடந்த அந்தத் தள்ளுவண்டி, தானியங்கு பாதையை நோக்கி நகரத் தொடங்கியது.

கீழ்த்தளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த தானியங்கு பாதையில் இறங்கிய தள்ளுவண்டி, வேகமாக உருண்டது. அந்தத் தானியங்கு பாதையில் நின்றுகொண்டிருந்த மாது ஒருவர் மீது அத்தள்ளுவண்டி மோதியதில் அவர் கீழே விழுந்தார்.

அதைக் கவனித்த பேரங்காடி ஊழியர் ஒருவர், தள்ளுவண்டியை நிறுத்த அதை நோக்கி ஓடினார். எனினும், அதை அவர் பிடித்து நிறுத்துவதற்குள், முன்னால் இருந்த மற்றொருவர் மீது அத்தள்ளுவண்டி மோதியதில் அவரும் விழுந்தார்.

இந்தச் சம்பவம் பிப்ரவரி 25ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிவாக்கில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

புளோக் 105 கேன்பெரா ஸ்திரீட்டில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஷெங் சியோங் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

"அவ்விரு வாடிக்கையாளர்களிடம் எமது கடை ஊழியர்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவியை வழங்கினர். எங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம்.

"இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்," என்றார் அப்பேச்சாளர்.

அவசர மருத்துவ வாகனம் எதுவும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்படவில்லை என அறியப்படுகிறது.