சிங்கப்பூரில் பலரும் விரும்பி உண்ணும் ஓர் உணவுவகை ‘நாசி லெமாக்’. தேங்காய்ப்பாலில் சமைக்கப்பட்ட சோற்றை இவ்வாறு அழைப்பார்கள்.
இதைப் பொட்டல வடிவில் பிரபல ‘பெங்கவான் சோலோ’ கடை விற்று வருகிறது.
இந்நிலையில், நவம்பர் 5ஆம் தேதி வெஸ்ட் மால் கடைத்தொகுதியின் பெங்கவான் சோலோ கிளையிலிருந்து வாங்கிய ஒருவருக்கு, காத்திருந்தது அதிர்ச்சி.
அதில் துருப்பிடித்த திருகாணி ஒன்றைக் கண்டுபிடித்தார் அவர்.
பொட்டலத்தின் தாள்மீது திருகாணி இருக்கும் படங்களை, ஸ்டோம்ப் தளத்தில் அந்த வாசகர் பகிர்ந்திருந்தார்.
பொட்டலத் தாளில் ‘ஏஷியன் கேட்டரிங் செர்விசஸ்’ என்ற ஒட்டுவில்லை ஒன்றும் காணப்பட்டது.
இதுகுறித்து ஸ்டோம்ப் தளம் விசாரித்ததற்கு, தாங்கள் விசாரித்து வருவதாகவும் திருகாணி எவ்வாறு பொட்டலத்தில் வந்தது என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் ஏஷியன் கேட்டரிங் செர்விசஸ் குறிப்பிட்டது.
விசாரணைக்காக சிங்கப்பூர் உணவு அமைப்பைச் சேர்ந்த ஓர் அதிகாரி, நிறுவனத்தின் வளாகத்திற்கு நவம்பர் 7ஆம் தேதி சென்றதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஸ்டோம்ப் தொடர்புகொண்டு கேட்டதற்கு, தாங்கள் விசாரித்து வருவதை சிங்கப்பூர் உணவு அமைப்பு உறுதிப்படுத்தியது.
இதற்கிடையே, உணவுப் பாதுகாப்பு தொடர்பில் உணவு நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் உணவு அமைப்பிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.