தேசிய சேவையைத் தொடங்குவதற்குக் காத்திருக்கையில், 20 வயது இளையர் ஒருவர், சட்ட விரோதமான மின் சிகரெட்டுகள், அதன் உபகரணங்களை விநியோகத்துக்காக பொட்டலமிடும் பகுதி நேர வேலையில் ஈடுபட்டார்.
130,000 தொகுதி மின்சிகரெட்டுகள், S$3.1 மில்லியன் (US$2.3 மில்லியன்) மதிப்புள்ள 60,000க்கும் மேற்பட்ட மின்சிகரெட் உபகரணம் ஆகியவற்றைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கிடங்கை அதிகாரிகள் உடைத்து உள்ளே நுழைந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். இதுவரை சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிகளவிலான மின்சிகரெட் மற்றும் உபகரணங்கள் இவை என்று தெரிவிக்கப்பட்டது.
புகையிலை (விளம்பரங்கள் மற்றும் விற்பனை கட்டுப்பாடு) சட்டத்தின்கீழ், விற்பனைக்காக போலி புகையிலை பொருள்கள், மின்சிகரெட்டுகளை வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுகளை தற்போது 21 வயதாகும் டான் டெக் ஜின், திங்கட்கிழமை (அக்டோபர் 7) ஒப்புக்கொண்டார்.
அந்த நேரத்தில் அவரது வயது, குற்றம் புரிந்தது குறித்து வருத்தம் தெரிவித்தது ஆகியவற்றை சுட்டிய, டானின் வழக்கறிஞர்கள் அவருக்கு நன்னடத்தைக் கண்காணிப்புத் தண்டனை விதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கட்டடப் பொறியியலிலும் வர்த்தகத்திலும் தனது படிப்பை முடித்த டான், 2022 செப்டம்பரில் பட்டயச் சான்றிதழ் பெற்றார்.
கைச்செலவுக்குப் பணம் ஈட்டுவதற்காக பகுதி நேர வேலையைத் தேடினார் என்றும் குத்துச்சண்டைப் பயிற்சிக்கு சுயமாக சம்பாதித்து நிதி சேர்க்க விரும்பினார் என்றும் டானின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
நண்பர் ஒருவரிடமிருந்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொருள்களைப் பொட்டலமிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு S$20 பெறலாம் என்று அவரிடம் கூறப்பட்டது.
டிசம்பர் 2022ல், மண்டாயில் உள்ள ஒரு கிடங்கில் மற்ற பொட்டலமிடுபவர்களுடன் டான் வேலையைத் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
டானுக்கு ஜனவரி 2023ல் சுமார் S$3,000 ரொக்கமாகச் சம்பளம் வழங்கப்பட்டது. மற்றொரு சந்தர்ப்பத்தில் மலேசியாவில் இருந்து அவர் சார்பாக சம்பளம் வசூலிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
மார்ச் 28, 2023 அன்று இரவு, மாண்ட்ரியல் லிங்க், புளாக் 592ல் உள்ள பல மாடி கார் நிறுத்துமிடத்தில் மின்சிகரெட், பிற பொருள்களை வைத்திருந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்தப் பொருள்கள் மண்டாயில் உள்ள கிடங்கில் உள்ளதாக அறிந்ததைத் தொடர்ந்து சுகாதார அறிவியல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு அங்கு மறைந்திருந்து காத்திருந்தனர்.
மறுநாள் அதிகாலை சுமார் 3.40 மணியளவில், மாண்டாய் கிடங்குக்கு வெளியே சீ ஹாங் ஜியான் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்கள் அந்த கிடங்கை சோதனை செய்தனர், போலியான புகையிலை பொருள்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களைக் கண்டுபிடித்தனர். டான் அதே நாளில் ‘வேலைக்கு’ வந்தபோது மேலும் ஐவருடன் தடுத்து வைக்கப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு S$3,121,328 ஆகும். அங்கிருந்து மேலும் பல கைப்பேசிகளும் மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டன.
மேல் விசாரணையில், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் மலேசியாவிற்கு மாற்றப்பட்டு அங்குள்ள விநியோகிப்பாளர்களுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டது தெரியவந்தது.

