சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்துக்கு நிதியளிக்கும் குற்றங்களை இறுக்கும் நோக்கில் சிங்கப்பூர் உள்பட ஏழு நாடுகள் கூட்டணி அமைக்க இசைந்துள்ளன.
நாடுகள் செவ்வாய்க்கிழமையன்று கரையோரப் பூந்தோட்டங்களில் நடைபெற்ற ‘யுனைடெட் ஃபார் வாய்ல்ட்லைஃப்’ மாநாட்டில் தங்களின் கூட்டணி குறித்து அறிவித்தன.
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சும் அரச அறநிலையமும் இணைந்து இந்த அமைப்பை நிறுவியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பிரகடனத்தின்படி சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் நிதி உளவுத்துறைப் பிரிவுகள் தங்கள் ஆதரவை அறிவித்துள்ளன. அத்துடன், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை எதிர்த்துப் போராடுவதற்கான பலதரப்பு அணுகுமுறை ஒன்றுக்கான ‘கொள்கை அறிக்கை’ தொடர்பிலும் தங்களின் ஒப்புதலை வழங்கின.
அனைத்துலக ஒத்துழைப்பின் ஆற்றலை மாநாடு மையமாகக் கொண்டிருந்ததுடன் தென்கிழக்காசியாவின் வெற்றிக் கதைகளையும் மாநாடு சிறப்பித்துக் குறிப்பிட்டது.
உலகின் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் 25%, தென்கிழக்காசிய வட்டாரத்தில் நடப்பதாக மதிப்பிடப்படுகிறது. அத்துடன் இவ்வகை குற்றங்களைக் கையாளும் நாடுகளில் இந்த வட்டாரம் முன்களத்தில் உள்ளது. பல வெற்றிக் கதைகள் சிங்கப்பூரிலிருந்து பெறப்பட்டவை என்றும் அறியப்படுகிறது.
சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகப் பிரச்சினையைக் கையாள்வதில் சிங்கப்பூர் அதிகாரிகள் ‘மிகச் சிறந்த தலைமைத்துவப்’ பண்பைக் காட்டியுள்ளதாக மாநாட்டுக்கு வருகை தந்திருந்த இளவரசர் வில்லியம்ஸ் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு சாங்கி விமான நிலையத்தில் $1.2 மில்லியன் மதிப்பிலான 34 கிலோ எடையுடைய காண்டாமிருகக் கொம்புகள் கைப்பற்றப்பட்டதை அவர் உதாரணம் காட்டினார்.
‘யுனைடெட் ஃபார் வாய்ல்ட்லைஃப்’, 2016ஆம் ஆண்டு முதல் 600 விசாரணைகளுக்கு ஆதரவு நல்கியுள்ளது. அத்துடன் சட்டவிரோத வனவிலங்குப் பொருள்களைக் கைப்பற்றிய 300 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இத்தகைய குற்றங்களைக் கண்டறிந்து கையாள 111,000க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

