உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கு இடையிலான போர்,கொவிட்-19 கொள்ளை நோய் போன்ற பிரச்சினைகளால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி அனைத்துலக வர்த்தகம், பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீதான நம்பிக்கையைக் குறைத்து விட்டது என செவ்வாய்க்கிழமை வெளியான உலக வர்த்தக அறிக்கை தெரிவிக்கிறது.
உலகமயமாக்கல், நாடுகளைப் பொருளியல்ரீதியாக வலிமையாக்குவதற்குப் பதிலாக அபாயங்களுக்கு உள்ளாக்கியுள்ளது என்ற எண்ணம் வலுக்கத் தொடங்கியுள்ளது எனவும் அதில் கூறப்பட்டது.
நாடுகளுக்கு இடையில் போர் உள்ளிட்ட சிக்கல்களுக்கு அது வித்திட்டுள்ளது. அனைத்துலகப் பாதுகாப்பு, சமத்துவமின்மை, விரைவாகும் பருவநிலை நெருக்கடி போன்றவற்றிலும் அதன் தாக்கங்கள் காணப்படுகின்றன. 2023ஆம் ஆண்டுக்கான உலக வர்த்தக அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
“அனைத்துலக வர்த்தகத்தை நாடுகளுக்கிடையிலான சவால்களுக்குத் தீர்வாகப் பார்க்காமல், பிரச்சினைகளின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றனர்,” என்று அந்த வருடாந்தர அறிக்கையில் உலக வர்த்தக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், மேலும் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான உலகத்தை உருவாக்குவதில் அனைத்துலக வர்த்தகம் இன்றியமையாத பங்கு வகிக்கிறது என்று அது சொன்னது.
அனைத்துலக வர்த்தக விதிகளை வகுக்கும் உலக வர்த்தக நிறுவனத்தில் சிங்கப்பூர் உட்பட 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
“சிங்கப்பூர் வர்த்தகத்தைப் பெரிதும் சார்ந்துள்ள நாடு. இந்த வட்டாரத்தின் நிதி நடுவமாக விளங்கும் அது, அனைத்துலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகமயமாக்கலின் மாறிவரும் போக்கால் பொருளியல் ரீதியாக மிகவும் ஆபத்தில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் உள்ளது,” என உலக வர்த்தக அறிக்கையின் ஒருங்கிணைப்பாளர் விக்டர் ஸ்டோல்சன்பர்க் கூறினார்.

