சிங்கப்பூரில் மின் சைக்கிள் விபத்துகள் அதிகரிப்பு

சிங்கப்பூரில் மின் சைக்கிள் விபத்துகள் அதிகரிப்பு

2 mins read
0ae5efec-3830-4355-89e5-c1dc5d27b43c
2022ஆம் ஆண்டு 157 மின் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் நடந்ததாகப் போக்குவரத்துக் காவல்துறை கூறியது.   - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அண்மைக் காலமாக மின்சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2020ஆம் ஆண்டு 16,000 மின் சைக்கிள்கள் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை இரு மடங்கிற்கும் மேல் உயர்ந்து இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் 37,320 ஆக உள்ளது.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட மின்சைக்கிள்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு 33,453 ஆக இருந்தது எனவும் அது 2022 ஆம் ஆண்டு 37,000 ஆக அதிகரித்துள்ளது எனவும் போக்குவரத்து அமைச்சும், நிலப் போக்குவரத்து ஆணையமும் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட்-19 கொள்ளை நோய்க் காலத்தின்போது உணவு, பொருள்கள் விநியோகம் செய்யப் பெரும்பான்மையான விநியோகப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் மின் சைக்கிள்களையே பயன்படுத்தினர்.

மேலும், அத்தகைய வாகனங்களின் விலை மலிவாகவும் உரிமம் இல்லாமல் ஓட்டுவதற்கு எளிதாகவும் இருப்பதால் அதைப் பெரும்பாலானோர் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். அதனுடைய எண்ணிக்கை அதிகரிக்க இவையே முக்கியமான காரணங்கள் எனப் போக்குவரத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மின்சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதுபோன்ற வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது எனப் போக்குவரத்துக் காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

2020ஆம் ஆண்டு மின்சைக்கிள்கள் தொடர்பான விபத்துகள் 78 நடந்தன. ஆனால் அது 2022ஆம் ஆண்டு இருமடங்காக அதிகரித்தது.

அந்த ஆண்டு மட்டும் 157 மின்சைக்கிள்கள் தொடர்பான விபத்துகள் நடந்ததாகப் போக்குவரத்துக் காவல்துறை கூறியது.

இந்த விபத்துகளில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன எனவும் அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்