‘சம்பளங்களை வெளிப்படுத்த நிறுவனங்கள் தயங்கக்கூடாது’

‘சம்பளங்களை வெளிப்படுத்த நிறுவனங்கள் தயங்கக்கூடாது’

2 mins read
fbfb1729-5fd8-4a4b-a6d8-38580ec69d13
தலைமை நிர்வாகிகள், இயக்குநர்களின் சம்பளங்களை வெளிப்படுத்துவதில் ஏற்படும் தயக்கத்தை பங்குச் சந்தைப் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் எதிர்கொள்ளவேண்டும். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் (எஸ்ஜிஎக்ஸ்) இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் தங்கள் தலைமை நிர்வாகிகள், இயக்குநர்களின் சம்பளங்களை வெளிப்படுத்துவதில் ஏற்படும் தயக்கத்தைக் கடந்துவர வேண்டும்.

அப்போதுதான் அதிகமான முதலீட்டாளர்களை ஈர்க்க, உள்ளூர் நிறுவன நிர்வாகக் கோட்பாட்டையும் பங்குதாரர்களுடன் உள்ள பொறுப்புடைமையையும் மேம்படுத்தமுடியும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இயக்குநர்கள், தலைமை நிர்வாகிகளின் சம்பளங்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதால் ஏற்படும் எவ்வித எதிர்மறையான விளைவுகளையும் சமாளிக்க நிறுவனங்களுக்கு இப்போதைக்குள் உத்திகள் இருக்கவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

நடப்புக்கு வரவிருக்கும் சிங்கப்பூர் பங்குச்சந்தையின் புதிய விதிமுறைப்படி, 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பொது நிறுவனங்களும் தங்கள் இயக்குநர்கள், தலைமை நிர்வாகிகளின் சம்பளங்களை வெளிப்படுத்தவேண்டும்.

அடிப்படை, நிலையான சம்பளம், மாறுவிகித அம்சம் அல்லது செயல்திறன் தொடர்பான வருமானம் அல்லது படித்தொகை, அனுகூலங்கள், பங்குத் தெரிவுகள், ஊக்கத்தொகைகள், விருதுகள், நீண்டகால ஊக்கத்தொகைகள் ஆகியவற்றை நிறுவனங்கள் வெளியிட வேண்டும்.

கடந்த புதன்கிழமை வெளியான சிங்கப்பூர் இயக்குநர்கள் கழகத்தின் அறிக்கையில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் இன்னும் தங்கள் தலைமை நிர்வாக அதிகாரிகள், இயக்குநர்கள் ஆகியோரின் சம்பளங்களைச் சரியாக வெளிப்படுத்துவதில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் அந்த அறிக்கை, எஸ்ஜிஎக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 650 நிறுவனங்கள், 42 சொத்துச் சந்தை முதலீட்டு நிறுவனங்கள், ஐந்து வர்த்தகத் தொழில்நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து தகவல்களைச் சேகரித்தது.

தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் அதிகரித்துள்ளபோதும், கடந்த ஈராண்டுகளில் சம்பளங்களை வெளியிடும் தரம் குறைந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்