தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாசரஸ் தெற்கே சிங்கப்பூரின் இரண்டாவது கடல்சார் பூங்கா

2 mins read
41f3dd19-4803-4c41-a56f-9b41a47b5cd6
தென் லாசரஸ் (மேல் இடது), கூசு கடற்பாறை (கீழ் வலது) ஆகியவற்றை சிங்கப்பூரின் இரண்டாவது கடல்சார் பூங்காவாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தென்தீவுகளில் இரண்டாவது கடல்சார் பூங்கா அமைப்பதற்கான திட்டம் உருவாகிவரும் நிலையில், மக்கள் பலரால் கடலுக்கடியில் பரவிக் கிடக்கும் வளமான கடல்சார் வாழ்க்கையைக் காணும் வாய்ப்பு கிட்டும்.

நாட்டின் இரண்டாவது கடல்சார் பூங்காவாக லாசரஸ் தீவையும் கூசு கடற்பாறையையும் அங்கீகரிக்கும் திட்டங்களை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ மே 9ஆம் தேதி அறிவித்தார்.

லாசரஸ் தீவில் செய்தியாளர்களிடம் பேசிய திரு லீ, “இரண்டாவது கடல்சார் பூங்காவை நாம் இறுதியில் உறுதிசெய்யும்போது கடல்சார், புவிசார் பாதுகாப்பை வலுவாக்க அது வகைசெய்யும்.

“கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் பெருமளவு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். இயற்கை சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடங்கள் புரிந்துணர்வுடன் வழங்கப்படும்,” என்றார்.

சிங்கப்பூரின் முதல் கடல்சார் பூங்கா, ‘சிஸ்டர்ஸ்’ ஐலண்ட்ஸ்’ கடல்சார் பூங்காவாகும். இந்த 40 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இடம் குறித்து 2014ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

அந்தக் கடல்சார் பூங்காவின் 10ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் புதிய கடல்சார் பூங்கா குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

இரண்டாவது கடல்சார் பூங்காவின்வழி தென்தீவுக் கடல்பரப்பில் உள்ள கடல்சார் பல்லுயிரினம் குறித்து கற்றுக்கொள்ள கூடுதல் வாய்ப்புகளை மக்கள் பெறலாம். அதேசமயம் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடலாம்.

அரசாங்க அமைப்புகளுடனும் சமூக பங்காளிகளுடனும் பேச்சுகளை தேசிய பூங்காக் கழகம் முடித்துக்கொண்ட பிறகு, திட்டமிடப்பட்டுள்ள கடல்சார் பூங்காவுக்கான எல்லைகள் 2025ஆம் ஆண்டுக்குள் முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பதற்கான பாதைகள் அமைப்பது போன்ற அம்சங்களும் வசதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது முடிவுசெய்யப்படும்.

இதற்கிடையே, 2021ஆம் ஆண்டு மேம்பாட்டுப் பணிகளுக்காக மூடப்பட்ட ‘பிக் சிஸ்டர்’ஸ் ஐலண்ட்’, 2024ன் இரண்டாம் பாதியில் மீண்டும் திறக்கப்படவுள்ளது. காட்டில் நடைபாதை அமைத்தல், குளத்தில் கடலடியைக் காணுதல் போன்ற நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபடலாம்.

குறிப்புச் சொற்கள்