2019ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் கடத்தி வரப்பட்ட பெங்கோலின் எனப்படும் ஒருவகை எறும்புதின்னியின் செதில்கள் பெரிய அளவில் கைப்பற்றப்பட்டன.
அவை, மேற்கு ஆப்பிரிக்காவில் இதுவரை யாரும் செல்லாத பகுதிகளில் இருக்கும் ஒருவகை எறும்புதின்னிகளின் செதில்கள் என சிங்கப்பூர் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள், மலிவான டிஎன்ஏ கைரேகை நுட்பங்களைப் பயன்படுத்தி இதைக் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு தடயவியல் நிலையத்தின் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய மரபணு தொழில்நுட்பம் ஆப்பிரிக்காவில் பல ஆண்டுகளாக நடந்துவரும் விலங்கு கடத்தலைத் தடுக்கப் பயன்படும் எனக் கழகம் திங்கட்கிழமை தெரிவித்தது.
இதன்மூலம் அனைத்துலக அதிகாரிகளின் பார்வையிலிருந்து மறைந்திருக்கும் விலங்கு கடத்தல்காரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே இதன் நோக்கம் என அது மேலும் கூறியது.


