தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் பொதுமக்களை பாதுகாக்க சிங்கப்பூர் வலியுறுத்து

2 mins read
1743debe-1df2-452b-98b8-581d0d6d81b9
நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா சிறப்புக் கூட்டத்தில் சிங்கப்பூரின் நிலையை எடுத்துரைத்த சிங்கப்பூருக்கான தூதர் புர்ஹன் கஃபூர். - படம்: ஐநா/ இவான் ஷினிடர்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரில் காஸாவில் உள்ள அப்பாவி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்று சிங்கப்பூர் வலியுறுத்தியுள்ளது.

“பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயத்தில் ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தலைமையிலான மனிதாபிமான முயற்சிகளை சிங்கப்பூர் ஆதரிக்கும்,” என்று ஐநாவுக்கான சிங்கப்பூர் தூதர் புர்ஹன் கஃபூர் தெரிவித்துள்ளார்.

“காஸாவில் நடக்கும் பயங்கரமான துயரச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குத் தடையின்றி மனிதாபிமானப் பொருள்களை கொண்டு சேர்ப்பதை சிங்கப்பூர் ஆதரிக்கிறது.

“மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் தலைமைச் செயலாளரின் தலைமைத்துவத்தை பாராட்டுகிறோம். இதில் ஐநா அமைப்புகள் ஆற்றும் முக்கிய பங்கை அங்கீகரிக்கிறோம். அதுமட்டு மல்லாமல் பதற்றத்தை தணிக்கும் அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக ஆதரிப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“ஐநா சாசனம் மற்றும் அனைத்துலகச் சட்டத்தை மதிப்பது சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கையாகும். அவை எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. ஐநா சாசனமும் அனைத்துலகச் சட்டமும் அனைத்துலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அடித்தளமாக விளங்குகின்றன,” என்று சிங்கப்பூர் தூதர் கஃபூர் குறிப்பிட்டார்.

நியூயார்க்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐநா அவசர சிறப்புக் கூட்டத்தில் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த அரபு நாடுகளின் தீர்மானத்திற்கு சிங்கப்பூர் ஆதரவாக வாக்களித்த நிலையில் திரு கஃபூர் சிங்கப்பூரின் நிலையை எடுத்துரைத்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு 120 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன; 45 நாடுகள் ஒதுங்கிவிட்டன. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்கிய பிறகு காஸா வட்டாரத்தை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. அண்மையில் ஆகாய மற்றும் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்