தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்காம் தலைமுறைக் குழு சிங்கப்பூரை சிறப்பாக வழிநடத்தும்: பிரதமர் லீ

2 mins read
feb61dce-9c03-4055-889f-7dea03e6b3d0
பிரதமர் என்ற முறையில் வியாழக்கிழமை தாம் தலைமையேற்ற இறுதி அமைச்சரவைக் கூட்டத்தில் திரு லீ சியன் லூங் (இடமிருந்து 5வது). - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளாக, கொவிட்-19 பெருந்தொற்று காலத்திலும் வாராந்திர அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கிய திரு லீ சியன் லூங், வியாழக்கிழமை (மே 9) பிரதமர் என்ற முறையில் தமது இறுதி அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தலைமையேற்றார்.

அது பற்றி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்த திரு லீ, அமைச்சரவைக் கூட்டங்களில் தமது சகாக்கள் அளித்த பேராதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலும் இணையம் வழி அமைச்சரவைக் கூட்டங்களை திரு லீ வழி நடத்தினார்.

“கடந்த 20 ஆண்டுகளாக நாட்டின் அமைச்சரவையை வழிநடத்தியதில் நான் பேருவகை கொள்கிறேன். ஓர் அமைச்சரவையில் பிரதமர் என்ற முறையில் எனது கட்டளைகளைக் கேட்போருக்குத் தலைவராக நான் செயல்படவில்லை. மாறாக, எனக்குச் சமமானவர்களில் முதன்மையானவராகச் செயல்பட்டேன். அனைவரும் ஒன்றிணைந்து விவாதித்து சிங்கப்பூருக்கான சிறந்த தீர்வுகளைக் கண்டுபிடித்தோம்,” என்றார் பிரதமர் லீ.

மே மாதம் 15ஆம் தேதியன்று, பிரதமர் லீ சியன் லூங்கிடமிருந்து, சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று ஏப்ரல் மாதம் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.

“அடுத்த வாரத்திலிருந்து பிரதமர் லாரன்ஸ் வோங் அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பார். நான் மூத்த அமைச்சராக தொடர்ந்து அமைச்சரவையில் அங்கம் வகிப்பேன்.

“நான்காம் தலைமுறைக் குழு சிங்கப்பூரை சிறப்பாக வழிநடத்தும். சிங்கப்பூரின் வெற்றிக்காக பணியாற்றும் புதிய குழுவினருக்கு நான் ஆதரவாக இருப்பேன்,” என்று திரு லீ தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

14 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்த துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், மே 15ஆம் தேதியன்று இரவு 8 மணிக்கு இஸ்தானாவில் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவி ஏற்றுக்கொள்வார்.

குறிப்புச் சொற்கள்