மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரியைக் கேள்வி கேட்ட சிங்கப்பூர் ஜோடிக்கு ஆறு மாதத் தடை

மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரியைக் கேள்வி கேட்ட சிங்கப்பூர் ஜோடிக்கு ஆறு மாதத் தடை

3 mins read
1f58fc88-a2d6-4b90-8514-d6518aaa2803
திரு அப்துல் கயூம், அவரின் மனைவியின் கடவுச்சீட்டுகள். படம்: கயூம் -

ஜோகூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் தங்கள் கடவுச்சீட்டில் முத்திரை பதித்த விதம் குறித்து கேள்வி எழுப்பிய ஒரு சிங்கப்பூர் ஜோடிக்கு அந்நாட்டுக்குள் நுழைய ஆறு மாதத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அப்துல் கயூம் ரஹிமும் அவர் மனைவியும் மார்ச் 20ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவடி வழியாக ஜோகூர் பாருவை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

"ஜோகூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் இரண்டு குடிநுழைவு முகப்புகள் மட்டுமே திறந்திருந்ததால், நாங்கள் சுமார் ஒரு மணிநேரம் வரிசையில் காத்திருந்தோம். நாங்கள் முகப்பை அடைந்தவுடன், எங்கள் கடவுச்சீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த அட்டையை அகற்றுமாறு பணிவன்பற்ற தொணியில் அந்த அதிகாரி கூறினார்.

"நாங்கள் அவ்வாறே வெளி அட்டையை அகற்றி, அந்த பெண் அதிகாரியிடம் கொடுத்தோம். எங்கள் விவரங்களைச் சரிபார்த்த பிறகு அந்த அதிகாரி கடவுச்சீட்டில் நுழைவு முத்திரையைப் பதித்தார். பின்னர் எனது கடவுச்சீட்டைப் பார்த்தபோது அதில் ஒரு பக்கத்தை வேண்டுமென்றே அதிகாரி விட்டுவிட்டு, முத்திரையைப் பதித்திருப்பதை அறிந்தேன்.

"என் மனைவியின் கடவுச்சீட்டில் அந்த அதிகாரி 27வது பக்கத்தில் முத்திரையிட்டு, பின்னர் அதில் பேனைவால் கோடு போட்டு, பின்னர் 28வது பக்கத்தில் மீண்டும் முத்திரையிட்டார்," என்றார் திரு கயூம்.

தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, குடிநுழைவு அலுவலகத்துக்குச் சென்று, அந்த பெண் அதிகாரிக்கு எதிராக புகார் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்று அங்கிருந்த ஆண் அதிகாரி ஒருவரிடம் கேட்டார் கயூம்.

"புகாரை இணையத்தில் மூலம் பதிவு செய்யலாம் என்று கூறிய அந்த அதிகாரி அதை எவ்வாறு செய்வது என்று கூறவில்லை. மேலும் அதை தனது அலுவலகத்துக்கு வெளியே சென்று செய்யுமாறு கூறினார். இணையத்தில் எவ்வாறு செய்வது என்று என் மனைவி தொடர்ந்து கேட்டதால், அந்த அதிகாரி கோபமடைந்து எங்கள் கடவுச்சீட்டுகளை அங்குள்ள 2வது மாடியில் உள்ள அலுவலகத்துக்குக் கொண்டு சென்றார். நாங்களும் பின்தொடர்ந்தோம். அங்கு எங்கள் பெயரைக் குறிப்பிட்டு, நாட்டுக்கு நுழைய தடை விதிக்கும் கடிதத்தை இந்திய பெண் உயர் அதிகாரி கையொப்பத்துடன் கொடுத்தார்," என்றார் கயூம்.

"நாங்கள் அந்த பெண் உயர் அதிகாரியிடம் தடை உத்தரவுக்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு அவர் காரணம் கூறவில்லை. மாறாக, அவர் தனது குரலை உயர்த்தி, நீங்கள் போகிறீர்களா அல்லது உங்கள் ஆறு மாதத் தடையை ஓர் ஆண்டாக மாற்றித் தரவா என்று கேட்டார். முகப்பில் உள்ள அதிகாரி பெயர் பட்டை அணிந்திருக்கவில்லை என்பதால் அவரது பெயரும் எங்களுக்குத் தெரியவில்லை," என்றார் கயூம்.

"நாங்கள் பணம் கொடுத்து கடவுச்சீட்டுகளைப் பெறுகிறோம். ஆனால் அந்த அதிகாரிகள் அதிலுள்ள பக்கங்களை வீணாக்குகிறார்கள். இதன் விளக்கத்தைத்தான் நான் அறிய விரும்புகிறேன்," என்று திரு கயூம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

கயூமின் பதிவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், முகப்பில் உள்ள அதிகாரிகள் நூற்றுக்கணக்கான கடவுச்சீட்டுகளுக்கு முத்திரையிடுகிறார்கள். அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தையும் நாம் பார்க்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.