பிரிட்டனில் கல்வியாளர்கள் தேர்வுத் தாள்களைத் திருத்த மறுப்பதால் இறுதி மதிப்பெண்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள பத்தாயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களில் சிங்கப்பூரர்களும் அடங்குவர்.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து 145 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் சம்பளம், வேலை சூழல் மேம்பாடுகளைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழக, கல்லூரி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அந்தக் கல்வியாளர்கள், தங்கள் போராட்டத்தின் ஓர் அங்கமாக மாணவர்களின் தேர்வுத் தாள்களைத் திருத்த மறுத்துள்ளனர்.
இந்த நிலை செப்டம்பர் இறுதிவரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், டர்ஹம் பல்கலைக்கழகம் போன்றவற்றின் கல்வியாளர்களும் அவர்களில் அடங்குவர்.
இதனால் பட்டக்கல்வி இறுதியாண்டு, முதுநிலைக் கல்வி மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்க முடியாமல் போகலாம். போதிய மதிப்பெண்கள் இல்லாததால் சில மாணவர்களுக்கு மேற்படிப்பைத் தொடர முடியாதநிலையும் ஏற்படலாம்.
அனைத்துலக மாணவர்கள், தங்கள் மதிப்பெண்களுக்குக் காத்திருக்கும் வேளையில் மாணவர் விசாவை நீட்டிக்க அனுமதி கோரலாம் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியிருக்கிறது.