‘மீனைத் தின்னும் மீனைத் தின்னும் மீன்’: சிங்கப்பூர் புகைப்படக் கலைஞருக்கு முதல் பரிசு

‘மீனைத் தின்னும் மீனைத் தின்னும் மீன்’: சிங்கப்பூர் புகைப்படக் கலைஞருக்கு முதல் பரிசு

2 mins read
edfdc863-8194-4b09-9ac4-380b35a396ed
கடலடி உயிர்வாழினப் பிரிவில் திருவாட்டி லிலியன் கோவிற்கு முதல் பரிசு பெற்றுத் தந்த படம். - படம்: லிலியன் கோ
multi-img1 of 3

முக்குளிப்பில் பெருநாட்டம் கொண்ட லிலியன் கோ, பிலிப்பீன்ஸ் கடல்பகுதியில் ஏறத்தாழ 20 மீட்டர் ஆழத்தில் இருந்தபோது, கலவாய் மீன் (Grouper) ஒரு தும்பிலி மீனின் (Lizardfish) பிடியிலிருந்து விடுவிக்கப் போராடியதைக் கண்டார்.

அதையறிந்த அவருடைய வழிகாட்டி, உடனே எல்லாவற்றையும் விட்டுவிட்டு அம்மீன்களை நோக்கிச் செல்லும்படி அவரை அறிவுறுத்தினார்.

அதன்படி, அவற்றைக் காணும் வகையில் தமது துடுப்புகளின் உதவியுடன் அவற்றை நோக்கிச் சென்றார் 47 வயதான திருவாட்டி லோ. அப்போதுதான், அப்போராட்டத்தில் மூன்று மீன்கள் ஈடுபட்டிருந்ததை அவர் காண முடிந்தது.

“முதலில் மீனைத் தின்னும் மீனை இன்னொரு மீன் தின்பதுபோல் தெரிந்தது. பின்னர்தான் மிகச் சிறிய தேராங்குனி (whitebait fish) மீனை அந்தக் கலவாய் மீன் துப்பியதைக் கண்டேன்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

தன்னைவிடப் பெரிய தும்பிலி மீனின் வாய்க்குள் கலவாய் மீன் சிக்கிக்கொண்டது. கிட்டத்தட்ட பத்து நிமிடப் போராட்டத்திற்குப்பின் அந்தக் கலவாய்மீன் தப்பியது.

தும்பிலி மீன் கிட்டத்தட்ட 10 சென்டிமீட்டர் நீளமும் கலவாய் மீன் கிட்டத்தட்ட 4 சென்டிமீட்டர் நீளமும் இருந்ததாக திருவாட்டி கோ குறிப்பிட்டார்.

‘மீனைத் தின்னும் மீன்’ என்று தலைப்பிடப்பட்ட இந்தப் படம் 2018ஆம் ஆண்டு பிலிப்பீன்சின் அனிலாவ் கடலோரப் பகுதியில் எடுக்கப்பட்டது.

இப்படமே, ஆண்டுதோறும் நடத்தப்படும் சியனா அனைத்துலகப் புகைப்பட விருதுகளில், கடலடி உயிர்வாழினப் பிரிவில் இவருக்கு முதல் பரிசைப் பெற்றுத் தந்தது.

“வாய் திறந்த நிலையில் ஒரு மீன் விடுபடப் போராடியதை நான் கண்டது இதுவே முதன்முறை,” என்றார் திருவாட்டி கோ.

குறிப்புச் சொற்கள்