ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதிக்கு ஒரு மில்லியன் வெள்ளி நன்கொடை

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதிக்கு ஒரு மில்லியன் வெள்ளி நன்கொடை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Nov 2026 - 7:18 pm

2 mins read

‘இன்ஃபோ-டெக் சிஸ்டம்ஸ்’ (Info-Tech Systems) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திலீப் பாபு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதிக்கு ஒரு மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளார்.

அதன் மூலம் அந்நிதிக்கு அவர் வழங்கிய தனிப்பட்ட நன்கொடைத் தொகை 2.45 மில்லியன் வெள்ளிக்கு உயர்ந்துள்ளது.

அந்நிதிக்கு அவர் அளித்த ஐந்தாவது, மிகப் பெரிய நன்கொடையான அது, வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) பெண்டமியர் சாலையில் உள்ள ‘இன்ஃபோ-டெக் சிஸ்டம்ஸ் இன்டகிரேட்டர்ஸ்’ அலுவலகத்தில் நடைபெற்ற மாதிரிக் காசோலை வழங்கும் நிகழ்வில் அளிக்கப்பட்டது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதியின் செயலாளரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான திருவாட்டி கரம்ஜித் கோரிடம் திரு திலீப் பாபு அக்காசோலையை வழங்கினார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் இளையர்க்கும் நிதியுதவி அளித்து, அவர்களின் அன்றாட அத்தியாவசியப் பள்ளிச் செலவுகளைச் சமாளிக்க உதவும் நோக்கத்திற்கு இந்நன்கொடை ஆதரவு அளிக்கும்.

ஆக அண்மை நன்கொடை, இதற்கு முன்னர் அவர் வழங்கிய நான்கு தனிப்பட்ட நன்கொடைகளின் தொடர்ச்சியாக அமைந்ததுடன், அர்த்தமுள்ள சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீடித்த ஆதரவு அவசியம் என்ற திரு பாபுவின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

வேலைவாய்ப்பு இணையவாசல் ‘ஜாப்ஸ்லா.காம்’ (JobsLah.com) நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான திரு பாபு, கல்வியைத் தாம் ஒரு முதலீடாய்க் கருதுவதாகக் கூறினார். அதோடு, நிதிச் சூழல் ஒருபோதும் ஒரு குழந்தைக்குத் தரமான கல்வி வழங்கப்படுவதற்குத் தடையாக இருக்கக்கூடாது என்றும் அவர் சொன்னார்.

“கல்விக்கு ஒருவரின் எதிர்காலத்தை மட்டுமின்றி, வரவிருக்கும் தலைமுறைகளின் வாழ்க்கையையும் மாற்றுவதற்கான வல்லமை உண்டு,” என்று அவர் தெரிவித்தார்.

“இந்தப் பங்களிப்பின் மூலம் மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்நோக்கும் நிதி நெருக்கடிகளை ஓரளவு குறைக்க முடியும் என நம்புகிறேன். அதே வேளையில், சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்துவது நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டிய ஒரு பொறுப்பு என்பதற்கு என் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கவும் விரும்புகிறேன்,” என்றும் திரு பாபு குறிப்பிட்டார்.

(இடமிருந்து) ‘இன்ஃபோ-டெக் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திலீப் பாபு, அவரின் மனைவி ரம்யா, பிள்ளைகள் ஸ்ரீநிதி, ஹரிணி, அர்ஜுன் ஆகியோருடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதியின் செயலாளரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிர்வாக ஆசிரியருமான திருவாட்டி கரம்ஜித் கோர்.
(இடமிருந்து) ‘இன்ஃபோ-டெக் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திலீப் பாபு, அவரின் மனைவி ரம்யா, பிள்ளைகள் ஸ்ரீநிதி, ஹரிணி, அர்ஜுன் ஆகியோருடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதியின் செயலாளரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிர்வாக ஆசிரியருமான திருவாட்டி கரம்ஜித் கோர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்