புக்கிட் மேரா வீவக மூவறை வீட்டு வாடகை $8,000 என்பது ‘தவறு’

புக்கிட் மேரா வீவக மூவறை வீட்டு வாடகை $8,000 என்பது ‘தவறு’

1 mins read
5e6b21d2-4070-44d5-bb99-50e57ab4b9cb
புக்கிட் மேராவின் தாமான் ஹோ சுவீயில் உள்ள வீடு, $8,000 மாத வாடகைக்கு விடப்பட்டதாக வெளியான செய்தி, புருவங்களை உயர்த்த வைத்தது. - படம்: ஷின் மின்

புக்கிட் மேராவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மூவறை வீடு ஒன்றின் மாத வாடகை $8,000 என்று குறிப்பிடப்பட்டது ‘தவறு’ என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வத் தரவுத்தளத்தில் அந்தப் பதிவேடு மாதத்திற்கு $900 என மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஸ்னஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த வீவக, “கூடுதல் சரிபார்ப்புக்குப் பிறகு, விண்ணப்ப படிவத்தில் எழுத்துப் பிழை ஏற்பட்டதை வீட்டு உரிமையாளர் தெளிவுபடுத்தினார்.

“ஒரு படுக்கை அறைக்கான மாத வாடகை $900 என்பதற்குப் பதிலாக, மொத்த வீட்டின் மாத வாடகை $8,000 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது,” என்றது.

ஆகஸ்ட் மாதம் கையெழுத்தான வீட்டு வாடகை குறித்த தரவில் வழக்கத்துக்கு மாறான இந்தத் தொகை இடம்பெற்றிருந்ததாக பிஸ்னஸ் டைம்ஸ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது. அது, வீவகவின் வாடகைச் சந்தை புள்ளிவிவரத்தில் பதிவுசெய்யப்பட்டது.

புக்கிட் மேராவின் தாமான் ஹோ சுவீயில் உள்ள அந்த வீடு, $8,000 மாத வாடகைக்கு விடப்பட்டதாக இந்த வாரம் வெளியாகியிருந்த செய்தி, புருவங்களை உயர்த்த வைத்தது. ஏனெனில், வீவக வீட்டிற்கு ஆக அதிக வாடகையைப் பெற்ற சாதனையை அது படைத்திருக்கும்.

மாத வாடகையாக $8,000 எனப் பார்த்தால், அப்பகுதியில் உள்ள மூவறை வீடுகளுக்கான $2,970 வாடகையைவிட இது கிட்டத்தட்ட மும்மடங்காக இருந்திருக்கும்.

இந்நிலையில், வீட்டு வாடகை குறித்த வீவகவின் தரவுத்தளத்தில், சம்பந்தப்பட்ட அந்த வீட்டின் படுக்கை அறைக்கான மாத வாடகை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) $900ஆக திருத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்