அர்ப்பணிப்பும் மனிதநேயமும் நிறைந்த தியாகத் திருநாள்

குர்பானின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் தியாகத் திருநாள்

அர்ப்பணிப்பும் மனிதநேயமும் நிறைந்த தியாகத் திருநாள்

2 mins read
51f68944-21c5-4974-a0ab-dde2af187d8a
தியாகத் திருநாளன்று அங்குலியா பள்ளிவாசலில் தொழுகையில் கலந்துகொள்ளத் திரளாக வந்திருந்த மக்கள். - படம்: பே.கார்த்திகேயன் 

சிராங்கூன் சாலையிலுள்ள அங்குலியா பள்ளிவாசலுக்குச் சிறு வயதிலிருந்தே தொழுகைக்காகச் செல்லும் 75 வயது திரு அப்துல் ரஹீம், அந்தப் பள்ளிவாசல் மூன்று முறை புதிய வடிவம் பெற்றதைப் பார்த்து வளர்ந்தவர். 

பள்ளிவாசலின் முன்னைய அமைப்புகளுடன் ஒப்பிடுகையில், பெருகிவரும் கூட்டத்திற்கு ஏற்பத் தற்போதைய வடிவம் நவீனமடைந்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார் திரு ரஹீம்.

ஹஜ்ஜுப் பெருநாளை அங்குலியா பள்ளிவாசலில் நீண்டகாலம் அனுசரித்துவரும் திரு ரஹீம், இவ்வாண்டு ‘குர்பான்’ சடங்கை இந்தியாவில் நிறைவேற்றியதாகக் கூறினார்.

அங்குலியா பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காகச் சென்றுவரும் 75 வயது திரு அப்துல் ரஹீம்.
அங்குலியா பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காகச் சென்றுவரும் 75 வயது திரு அப்துல் ரஹீம். - படம்: பே.கார்த்திகேயன் 

திரு ரஹீமைப் போல உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளைச் சிறப்புத் தொழுகையுடன் அனுசரித்தனர்.

இறைவனின் கட்டளையை நிறைவேற்ற சொந்த மகனைத் தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபியின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் வகையில் ஹஜ்ஜுப் பெருநாள் அனுசரிக்கப்படுகிறது. 

வசதி குறைந்தோருடன் உணவைப் பகிர்ந்துகொள்வது ஹஜ்ஜுப் பெருநாளில்  கடைப்பிடிக்கப்படும் வழக்கம்.

அங்குலியா பள்ளிவாசலின் துணை நிர்வாகி 32 வயது ஃபாரூக் அஹமது.
அங்குலியா பள்ளிவாசலின் துணை நிர்வாகி 32 வயது ஃபாரூக் அஹமது. - படம்: பே.கார்த்திகேயன் 

அங்குலியா பள்ளிவாசலின் துணை நிர்வாகி 32 வயது ஃபாரூக் அஹமது, வெளிநாட்டு ஊழியர்கள் வந்துசெல்லும் இங்குக் கூட்டத்தைச் சமாளிக்க 70 முதல் 80 தன்னார்வலர்கள் வரை பணியாற்றியதாகக் கூறினார்.

அங்குலியா பள்ளிவாசலின் மூன்று அமர்வுகளிலும் சேர்த்து மொத்தம் 3,500 முதல் 5,300 பேர் வரை கலந்துகொண்டனர். 

அங்குலியா பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை, ஆங்கிலம், வங்காளம், தமிழ் ஆகிய மொழிகளில் இடம்பெற்றது.

“‘குர்பான்’ இறைச்சியை நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கொடுப்பதற்கு அப்பால் வசதி குறைந்தோருக்குக் கொடுக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியையே இறைவன் விரும்புகிறார்,” என்றார் திரு ஃபாரூக்.

ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்படும் ‘குர்பான்’ இறைச்சியை இந்தோனேசியாவிலும் காஸாவிலும் உள்ள வசதிகுறைந்தோருக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளை அங்குலியா பள்ளிவாசல் செய்ததாகவும் திரு ஃபாரூக் தெரிவித்தார். அதற்கு 15 நாள்கள் தேவைப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

அங்குலியா பள்ளிவாசல்.
அங்குலியா பள்ளிவாசல். - படம்: பே.கார்த்திகேயன்

 

தமிழில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் கலந்துகொண்ட மக்கள்.
தமிழில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் கலந்துகொண்ட மக்கள். - படம்: பே.கார்த்திகேயன்

பள்ளிவாசளுக்கு நீண்டகாலமாகத் தொழுகை செய்யவரும் 71 வயது நூருல் அமீனும் ‘குர்பான்’ சடங்கை இந்தியாவில் நிறைவேற்றினார். சிங்கப்பூரில் ஒருசில குறிப்பிட்ட பள்ளிவாசல்களில் மட்டுமே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதால், பலர் அந்தச் சடங்கை வெளியூர்களில் செய்கின்றனர்.

விநியோகிப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டே அவ்வாறு செய்ததாக அவர் சொன்னார்.

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை, பள்ளிவாசலில் முடிந்த பிறகு, பிற்பகலில் உற்றார் உறவினரின் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் அந்த நாளை மகிழ்ச்சியாகச் செலவிடுவதாகத் திரு நூருல் அமீன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்