சிங்கப்பூர் ஆயுதப் படை, பிரட்டனில் கூட்டு ராணுவப் பயிற்சியை நிறைவு செய்ததாகத் தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை (செப்டம்பர் 21) தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 9 முதல் 22 வரை நடத்தப்படும் ‘சுமான் வாரியர்’ எனப்படும் அந்தப் பயிற்சி, ஒருங்கிணைந்த வழக்கமான நில நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது.
ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, தென்மேற்கு இங்கிலாந்தின் வில்ட்ஷியர் மாவட்டம், வார்மின்ஸ்டரில் பிரிட்டிஷ் ஆயுதப் படை ஏற்று நடத்திய இந்தப் பயிற்சியில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் சேர்ந்த ராணுவங்கள் பங்கேற்றன.
ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடுகளைக் கொண்ட நாடுகளுக்கு இடையேயான பயிற்சி வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றது.
சிங்கப்பூர் காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த 703வது படைப்பிரிவின் ஆணை அதிகாரி லெஃப்டினண்ட் கர்னல் கோலின் யூ தலைமையில், சிங்கப்பூர் ஆயுதப் படையின் 28 வீரர்களைக் கொண்ட குழு பயிற்சியில் பங்கேற்றது.
1971ல் அமைக்கப்பட்ட ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடுகள், பெருகிவரும் சிக்கலான வட்டார பாதுகாப்புச் சூழலில் காலத்துக்கு ஏற்புடையதாகவும் ஆக்ககரமானதாகவும் இருக்க தொடர்ந்து மாற்றியமைத்துக் கொள்வதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு கூறியது.