சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த ஒருவர் தமது உணவகத்தில் 150 பிரியாணிப் பொட்டலங்களைத் தயாரிக்கச் சொன்னார். ஆனால் அதை வாங்க அவர் வரவில்லை என்று ஃபேஸ்புக் பக்கத்தில் உணவங்காடி உரிமையாளர் ஒருவர் பதிவிட்டார்.
அதனால் தமது பிரியாணிப் பொட்டலங்களை சிறப்பு விலையில் வாங்கிக்கொள்ளுமாறும் இணைய வாசிகளை அவர் செப்டம்பர் 9ஆம் தேதி கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தற்காப்பு அமைச்சு பிரியாணிப் பொட்டலங்கள் குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 10) விளக்கம் தெரிவித்துள்ளது.
“உணவங்காடி உரிமையாளர் சொன்னதை விசாரித்தோம். தீவிர விசாரணைக்குப் பிறகு சிங்கப்பூர் ஆயுதப் படைக்கும் பிரியாணிப் பொட்டலங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என்று அமைச்சு பதிவிட்டது.
தியோங் பாரு சந்தையில் உள்ள உணவங்காடி நிலையத்தில் முகம்மது ஷாஜெய்ன் ஃபைஹா முஸ்லிம் ஃபுட் பேரடைஸ் உள்ளது.
அங்கு ஆயுதப் படையைச் சேர்ந்ததாக ஒருவர் தம்மை அறிமுகம் செய்துகொண்டு உணவங்காடியில் 150 கோழி, இறைச்சிப் பிரியாணி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ராணுவ அமைப்பு அரசாங்கத்திற்குக்கீழ் உள்ளது. அதனால் பிரியாணிப் பொட்டலங்களுக்கு முன்பணம் கொடுக்க முடியாது என்று அந்த ஆடவர் உணவக உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
உணவுடன் தண்ணீர் போத்தல்களையும் அந்த ஆடவர் கேட்டுள்ளார். மேலும் இது ராணுவ வீரர்களுக்குக் கொடுக்கப்படும் என்பதால் விலையைக் குறைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
உணவக உரிமையாளரும் ராணுவ வீரர்களுக்கான உணவு என்பதால் கூடுதலான கோழி, இறைச்சி, சோறு ஆகியவற்றைப் பொட்டலத்தில் வைத்தார். ஆனால் வெகுநேரமாகியும் அந்த ஆடவர் அப்பொட்டலங்களை வாங்க வரவில்லை.
இறுதியில் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த உணவக உரிமையாளர் ஃபேஸ்புக்கில் சம்பவம்குறித்து பதிவிட்டார். மேலும் அவர் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஃபூ சேசியாங்கையும் பதிவில் சேர்த்துக்கொண்டார்.
ஃபூவும் தமது குடியிருப்பாளர்கள் உணவகத்திற்கு உதவுமாறு ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டுக்கொண்டார். இறுதியில் அந்த 150 பிரியாணி பொட்டலங்களும் விற்றுத் தீர்ந்தன.
மற்றொரு ஃபேஸ்புக் பதிவில் கடைக்காரர் பொட்டலங்கள் அருகிலுள்ள முதியோருக்கும் நன்கொடையாளரால் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டதாக பதிவிட்டார். இதுபோன்ற மோசடிகளில் சிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் பொது மக்களைக் கேட்டுக்கொண்டனர்.

