பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான சமூக ஊடகம்; பெற்றோருடன் கலந்துரையாடும் அமைச்சு

பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான சமூக ஊடகம்; பெற்றோருடன் கலந்துரையாடும் அமைச்சு

2 mins read
c82747c1-0886-442d-871a-c1341d7e79b9
சமூக ஊடகத்திற்கு அடிமையாகும் பிள்ளைகள் மனத்தளவில் பாதிப்புகளை ஏதிர்நோக்கலாம் எனப் பெற்றோர் பலரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக ஊடகங்களில் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவது, சமூக ஊடகத்தில் உள்ள ஒரு நபருடன் தங்களை ஒப்பிட்டுக்கொள்வது, பாதிப்பு தரக்கூடிய காணொளிகளைத் தொடர்ந்து பார்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளை இளம் பிள்ளைகள் எதிர்நோக்கி வருகின்றனர்.

சமூக ஊடகத்திற்கு அடிமையாகும் பிள்ளைகள் மனத்தளவில் பாதிப்புகளை ஏதிர்நோக்கலாம் எனப் பெற்றோர் பலரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சமூக ஊடகங்கள், மின்னிலக்கத் தளங்கள் குறித்து கவலை கொண்ட பெற்றோர், ஜூலை 25ஆம் தேதி காலை 8.45 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை, 1 மரினா பொலிவார்டில் உள்ள என்டியுசி நிலையத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கலாம்.

இந்த நிகழ்வு குழந்தைகளுக்கான பாதுகாப்பான மின்னிலக்கச் சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும், த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழும் இணைந்து கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்காக அரசாங்கம் எடுக்கும் திட்டங்கள் குறித்தும் கருத்துகள் சேகரிக்கப்படும்.

மின்னிலக்கத் தளங்களைக் குழந்தைகளுக்கு உகந்ததாக மாற்றுவதற்கான சமூக முயற்சிகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அந்தக் கலந்துரையாடலின் நோக்கமாக உள்ளது.

13 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டுமா, 18 வயது வரையிலான மூத்த குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ற அனுபவங்களை உறுதி செய்ய என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் பங்கேற்பாளர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும்.

இந்தக் கலந்துரையாடல் குழுவில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அமைச்சின் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், மனநலக் கழகத்தின் மூத்த அதிகாரி லிம் சூன் குவான், ‘டச்’ சமூக சேவைகள் அமைப்பின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் டான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் இணை ஆசிரியர் கரம்ஜித் கவுர் வழிநடத்துகிறார்.

குறிப்புச் சொற்கள்