போக்குவரத்துக் காவல்துறையின் ஆதரவுடன் சாலைப் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் ஏற்பாடு செய்தது. திங்கட்கிழமையன்று (ஜூன் 14) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) உதவித் தலைமைச் செயலாளரும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் உறுப்பினருமான திரு மெல்வின் யோங் கலந்துகொண்டார். சூன் லீயில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தின் பொழுதுபோக்கு மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெளிநாட்டு ஊழியர்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இந்த நிகழ்ச்சியும் ஒன்று.
அன்றாடப் பயணங்களின்போது பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான ஆற்றலை வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சிங்கப்பூர் ஊழியரணியில் வெளிநாட்டு ஊழியர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு போக்குவரத்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்க சமூக ஈடுபாட்டுடன் அனுபவ ரீதியான கற்றல் அணுகுமுறை கையாளப்பட்டது.
கோ-கார்ட் சாலைப் பாதுகாப்புப் பாவனைப் பயிற்சி, கார் பந்தயப் பாவனைப் பயிற்சி, போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளின் சாலைப் பாதுகாப்பு உரை போன்றவை அதில் அடங்கும்.
இந்த சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் ஏறத்தாழ 5,000 வெளிநாட்டு ஊழியர்கள் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் வேலையிடத்துடன் நின்றுவிடுவதில்லை. தங்குமிடத்திலிருந்து வேலையிடத்துக்கும் வேலையிடத்திலிருந்து தங்குமிடத்துக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம் செய்வதும் வேலையிடப் பாதுகாப்பின்கீழ் வரும். வெளிநாட்டு ஊழியர்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பது நம் அனைவரின் ஒருமித்த கடமையாகும். வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகளை மற்ற அமைப்புகளுடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் மேற்கொண்டு வருகிறது. ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றை மேம்படுத்த என்டியுசி தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளது,” என்று திரு யோங் தெரிவித்தார்.

