ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுச் (generative artificial intelligence) செயலிகளைப் பயன்படுத்துவோர், செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம், அதில் உள்ள அபாயங்கள், எவ்வாறு அவை சோதிக்கப்படுகின்றது என்று தெரிவிக்கும் தகவல்களை விரைவில் காண்பார்கள்.
தொழில்நுட்பத்தை எளிதில் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இந்த வழிகாட்டுதல் முறையும் ஒன்று. ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு என்பது உரை, படங்கள் போன்ற புதிய உள்ளடக்கத்தை உருவாக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு. மேலும் இது பாரம்பரிய செயற்கை நுண்ணறிவை விட குறைவாகக் கணிக்கக்கூடியது.
மருந்துகள் அல்லது வீட்டு உபகரணங்களில் உள்ள பாதுகாப்பு வில்லைகளைப் போல, இந்தத் தகவல்கள் அமையும் என்று தெரிவித்த தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் சோதனையை எவ்வாறு புரிந்துகொள்கின்றன என்பதை தரநிலைப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்றார்.
ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவின் படைப்பாளிகள், வகைப்படுத்துபவர்கள், அந்த முறையில் ஏதேனும் அபாயங்கள் உள்ளனவா, அதன் வரம்புகள், அந்த முறைகள் எவ்வாறு சோதிக்கப்பட்டன என்பதில் பயன்படுத்தப்பட்ட தரவு தொடர்பில் பயனர்களுடன் தெளிவாக இருக்க வேண்டும் என்றார் திருவாட்டி டியோ. மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் ஜூலை 15 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் தனிநபர் தகவல் பாதுகாப்பு வாரத்தைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.
“ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு மாதிரிகளும் செயலிகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய தகவலை வழங்குவதன் மூலம் மேம்பாட்டாளர்களும் வகைப்படுத்துபவர்களும் பயனர்களுடன் வெளிப்படையாக இருக்குமாறு நாங்கள் பரிந்துரைப்போம்,” என்றும் அவர் கூறினார்.
வழிகாட்டுதல்கள் பற்றி விளக்கிய அமைச்சர், “நீங்கள் மருந்துக்கடையிலிருந்து பெற்ற மருந்துப் பெட்டியைத் திறக்கும்போது, அதில் உள்ள ஒரு காகிதம் நீங்கள் மருந்து உட்கொள்ளும் முறை, அதன் பக்கவிளைவுகள் என்ன போன்றவற்றை விளக்கும். இதுபோன்ற வெளிப்படையான வழிகாட்டிதான் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவுக்கும் தேவை. அதுதான் எங்கள் பரிந்துரையாகும்,” என்றார்.
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதற்கு முன்பு சோதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த வழிகாட்டுதல்கள் பொய்கள், உணர்வுபூர்வமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகள், குறிப்பிட்ட ஒருவரைத் தாக்கக்கூடிய உள்ளடக்கம் போன்றவற்றுக்கு எதிரான தெளிவான பாதுகாப்பு வரையறைகளை உருவாக்கும்.
தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் இந்த வழிகாட்டுதல்கள் தொடர்பில் தொழில்துறையுடன் விரைவில் ஆலோசனைகளை நடத்தும் என்று குறிப்பிட்ட அமைச்சர் அவை எப்போது தொடங்கும் என்றும் வழிகாட்டுதல்கள் எப்போது தயாராகும் என்பது பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

