சிங்கப்பூர் ஆயுதப்படையின் சாஃப்ரா (SAFRA) மன்றம், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் தேசியச் சேவையாளர்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய நடவடிக்கைகளை அதிகரிக்கவிருக்கிறது.
மன்றத்தின் திறன் அதற்கேற்ப மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) இடம்பெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது, துணையமைச்சர் டெஸ்மண்ட் சூ ஆகியோர் உரையாற்றினர்.
“முழுமைத் தற்காப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தற்காப்பு அமைச்சு, சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுடன் சேர்ந்து செயல்படும்,” என்றார் அமைச்சர் சான்.
தொடர்ந்து பேசிய துணையமைச்சர் டெஸ்மண்ட் சூ, மன்றத்தின் வளர்ச்சி குறித்து விளக்கினார்.
“இணையத்தாக்குதல், பொய்ச்செய்திப் பரவல், சமூகப் பிரிவுகளைப் பயன்படுத்திப் பொது அமைப்புகள் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் அந்நிய சக்திகளின் முயற்சிகள் ஆகியவற்றைச் சந்திக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள ஆயுதப்படையின் தயார்நிலையுடன் பொதுமக்களுக்கும் சேவையாளர்களுக்கும் இடையிலான நம்பிக்கை அவசியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நடைபெறவுள்ள மேம்பாடுகள் குறித்தும் திரு டெஸ்மண்ட் சூ பேசினார்.
சாஃப்ரா மன்றம் மேற்கொள்ளவுள்ள புதிய நடவடிக்கைகள்
ஒவ்வொரு காலாண்டுக்கும் தேசியச் சேவைக்குப் பிந்திய மாற்றத்துக்கான ‘ஸ்கில்ஸ் பியூச்சர்’ கண்காட்சிகளுக்கு மன்றம் ஏற்பாடு செய்யும். புதிய பணிகளைத் தேடும் சேவையாளர்களுக்கும் இது உதவும்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்கள் தற்காப்புக் குறித்து அறிந்துகொள்ள உதவும் ‘சமூகத் தற்காப்பு, மீள்திறன் விழா அடுத்த ஆண்டின் (2027) முதல் காலாண்டில் நடைபெறும். தீவெங்கிலும் பல்வேறு இடங்களில் இவ்விழா நடைபெறவுள்ளது. ஏறக்குறைய 80 ஆயிரம் பேரைச் சென்றடைவது இலக்கு.
தலைமுறைகளை இணைக்கும் முயற்சியாகத் தற்போது இரண்டு வகை முகாம்களை நடத்தும் மன்றம், ஆயுதப்படை, பிற பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து புதிய முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யும். இதில் பெண்களுக்கு ஆதரவளிக்கும் இரண்டு நாள் முகாமும் அடங்கும்.
சேவையாளர்கள் வழிகாட்டிகளாக, தொழில்துறை இணைப்பாளர்களாக முன்னேற ஊக்குவிக்கும் தளங்களையும் மன்றம் விரிவுபடுத்தும்.
தற்காப்புத் துறையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்குச் சாலைக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாண்டின் பிற்பகுதியில் தேசியச் சேவையையொட்டிய உடற்பயிற்சி விழாவும் நடைபெறும்.
மேலும் தற்காப்புக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்புகளை விரிவாக்க மன்றம் சேவையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும்.

