“’ஹோம்டீம் என்எஸ்’ மற்றும் சாஃப்ரா மன்றங்களை ஒரே அமைப்பின்கீழ் கொண்டு வாருங்கள்,” என்று ஜனவரி 12ஆம் தேதி திரு பெஞ்சமின் கோ லை ஹுவாட் எழுதிய கடிதத்துக்கு தற்காப்பு அமைச்சும் உள்துறை அமைச்சும் கூட்டாகப் பதிலளித்துள்ளன.
“முதலில் அந்தக் கடிதத்தை எழுதிய திரு பெஞ்சமின் கோவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். சாஃப்ரா மற்றும் ‘ஹோம்டீம் என்எஸ்’ ஆகியவை தேசிய சேவையாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து அவர்களிடையே சமூகப் பிணைப்பை உருவாக்குவதற்காக நிறுவப்பட்டன.
“சிங்கப்பூர் ஆயுதப்படைகளில் தேசிய சேவை பணியாற்றியவர்கள் சாஃப்ரா உறுப்பினராவதற்குத் தகுதியுடையவர்கள். அதேவேளையில், சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றில் பணியாற்றியவர்கள் ‘ஹோம்டீம் என்எஸ்’ உறுப்பினராவதற்குத் தகுதியுடையவர்கள்,” என்று உள்துறை அமைச்சும் தற்காப்பு அமைச்சும் தெரிவித்தன.
“தனித்தனி சங்கங்களும் மனமகிழ் மன்றங்களும் இருப்பது, சாஃப்ரா, ஹோம்டீம் என்எஸ் ஆகியவை ஒரு தனித்துவமான அடையாளத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கவும் அவர்களின் வசதிகள், சேவைகள், திட்டங்களை அந்தந்த தேசிய சேவையாளர் சமூகங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் வடிவமைக்க அனுமதிக்கிறது.
“1993 முதல், அனைத்து தேசிய சேவையாளர்களுக்கும் மனமகிழ் மன்ற வசதிகள் மற்றும் சேவைகளுக்கான அனுமதியை மேம்படுத்த, இரண்டு சங்கங்களும் ஏழு சாஃப்ரா மனமகிழ் மன்றங்கள், மூன்று ‘ஹோம்டீம் என்எஸ்’ மனமகிழ் மன்றங்களில் தகுதியான உறுப்பினர்களுக்குப் பகிரப்பட்ட சலுகைகளை வழங்கும் பரஸ்பர ஏற்பாடுகளை நிறுவியுள்ளன,” என்றும் விளக்கப்பட்டது.
“உறுப்பினர்கள், சிங்கப்பூர் ஆயுதப்படை அல்லது உள்துறைக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நீச்சல் குளங்களுக்கான அனுமதி, வசதிகளை முன்பதிவு செய்வதற்கான முன்னுரிமை விகிதங்கள், பொழுதுபோக்கு, சில்லறை விற்பனை நிலையங்களில் சலுகைகள் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். மனமகிழ் மன்றங்களின் பரஸ்பர ஏற்பாடுகள் பற்றிய விவரங்களை சாஃப்ரா மற்றும் ‘ஹோம்டீம் என்எஸ்’ இணையத் தளங்களில் காணலாம்.
“இரு சங்கங்களும் எங்கள் சிங்கப்பூர் ஆயுதப்படை, சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் தேசிய சேவையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும்,” என்று தற்காப்பு அமைச்சின் மனிதவளப் பிரிவின் இயக்குநர் ஷோன் கோவும், உள்துறை அமைச்சின் மனிதவளப் பிரிவின் மூத்த இயக்குநர் ஷெர்லின் இங்கும் அறிக்கையில் தெரிவித்தனர்.

