சஃப்ரான் எலக்ட்ரிக்கல் & பவர் (எஸ்இபி), எண் 7 சிலேத்தார் ஏரோஸ்பேஸ் லேனில் அமைந்துள்ள 2,800 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு புதிய தொழிற்சாலையைச் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) அன்று திறந்துள்ளது.
எஸ்இபி என்பது பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான சஃப்ரானின் துணை நிறுவனமாகும். இது யூரோநெக்ஸ்ட் பாரிஸ் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் விண்வெளிப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பாகங்களை மாற்றியமைத்தல் துறையில் பிரபலமாக விளங்கும் நிறுவனங்களில் ஒன்று.
இந்தத் தொழிற்சாலையில் சுமார் 70 பேர் பணியாற்றுகின்றனர். விமானங்களுக்கான மின் அமைப்புகள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி, பராமரிப்பு, பழுதுபார்ப்பு, பாகங்களை மாற்றியமைத்தல் பணிகளுக்குப் பெயர் பெற்றது. இதில் மின் மாற்றிகள் (power converters), தொடக்க விசை (starters), மாற்று மின்னோட்டக் கருவிகள் (rectifiers) மற்றும் மின்கலன்கள் (batteries) ஆகியவை அடங்கும். இது சிங்கப்பூரில் சஃப்ரானின் முதல் உற்பத்தித் தொழிற்சாலையாகும்.
வரும் ஆண்டுகளில் இவ்வட்டாரத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளித் தொழில்களில் பொதுவான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிறுவனம், குழுமம் ஆகிய இரண்டின் கூடுதல் வளர்ச்சிக்கான லட்சியங்களை இந்தப் புதிய தொழிற்சாலை பிரதிபலிக்கிறது என்று எஸ்இபி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி புருனோ பெல்லாங்கர் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொழிற்சாலையின் உற்பத்தி 30 முதல் 50 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தி பிஸ்னஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
தொழிற்சாலை அமையும் இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் அதன் பணியாளர்களின் தரம், சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம், ஜேடிசி கார்ப்பரேஷன் உள்ளிட்ட உள்ளூர் பங்காளிகளின் ஆதரவு ஆகியவை மற்ற முக்கிய காரணிகள் என்று அவர் மேலும் கூறினார்.
“சிலேத்தார் விண்வெளிப் பூங்காவில் உள்ள எங்கள் விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்புக்கு இந்தத் தளம் புதிய ஆற்றல்களைச் சேர்க்கும்,” என்று ஜேடிசி கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக்லின் போ கூறினார்.
“எஸ்இபியின் புதிய தொழிற்சாலை, விமான மின்மயமாக்கல் மற்றும் மேம்பட்ட உந்துவிசை ஆகியவற்றில் எதிர்கால வாய்ப்புகளுக்கு இந்தத் துறையை நிலைநிறுத்துகிறது. இது சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்துத் துறைக்கான கரிம நீக்கத் திட்டங்களை ஆதரிக்கிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

