அரசியல் பதவி வகிப்போரின் சம்பளத்தை மறுஆய்வு செய்ய 2025 டிசம்பரில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து, அரசியல் பதவி வகிப்போர்க்கு ஒருமுறை மட்டும் 9 விழுக்காடுவரை சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
அதன்படி, ‘எம்ஆர்4’ அமைச்சர் ஒருவரின் ஆண்டுச் சம்பளம் 1.1 மில்லியனிலிருந்து 1.2 மில்லியன் வெள்ளியாக உயரும்.
இந்தத் திருத்தப்பட்ட சம்பளக் கட்டமைப்பு இவ்வாண்டு அக்டோபர் 15ஆம் தேதிமுதல் நடப்பிற்கு வரும்.
இதன் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங், ‘எம்ஆர் 4’ அமைச்சருக்கான சம்பள அளவீட்டுக் குறியீட்டை $1.1 மில்லியனிலிருந்து $1.8 மில்லியனாக உயர்த்தும் மறுஆய்வுக் குழுவின் பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அமைச்சர்களுக்கான சம்பள வரம்பு விரிவுபடுத்தப்படும். இந்த ஒருமுறை சம்பள உயர்வுடன், அமைச்சர்களின் சம்பளம் அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து திருத்தியமைக்கப்படும் என்று நிதியமைச்சருமான திரு வோங் கூறினார்.
கடந்த 15 ஆண்டுகளில் பொதுச் சேவை, தனியார் துறைகளைக் காட்டிலும் அமைச்சர்களின் சம்பளம் பின்தங்கிய நிலைக்குச் சென்றுவிட்டதால் அமைச்சர்களின் சம்பளக் கட்டமைப்பைத் திருத்தியமைக்கும் முடிவைத் தாம் எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
தனியார் துறையுடன் ஒப்பிடும்போது அந்த இடைவெளி தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்ட அவர், அரசுத் துறையிலும் சில மூத்த நிரந்தரச் செயலாளர்கள் அமைச்சர்களைவிட அதிக சம்பளம் பெறுவதைச் சுட்டிக்காட்டினார்.
அரசியல் பதவி வகிப்போரின் சம்பளம் கடைசியாக 2012ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டில் அவர்களின் சம்பளத்தை உயர்த்த மறுஆய்வுக் குழு பரிந்துரைத்தபோதும் அப்போதைய நிலையில்லாப் பொருளியல் சூழலைக் கருத்தில்கொண்டு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என அரசாங்கம் முடிவுசெய்தது.
அதன்பின் 2023ஆம் ஆண்டில் அடுத்த மறுஆய்வுக்குத் திட்டமிட்டிருந்தபோதும் அதுவும் தள்ளிவைக்கப்பட்டது.
“கொள்கை அளவில் ஒரு கட்டமைப்பை ஒப்புக்கொண்டுவிட்டு, நடைமுறையில் அதனை காலவரையறையின்றிப் புறக்கணிக்க முடியாது. இல்லையேல், காலப்போக்கில் அந்தக் கட்டமைப்பு தன் அர்த்தத்தை இழந்துவிடும். கட்டுப்பாடானது புறக்கணிப்பாக மாறிவிடக்கூடாது,” என்று பிரதமர் வோங் கூறினார்.
புதிய சம்பளக் கட்டமைப்பின்படி, வருடாந்தர குறியீட்டுச் சம்பளமானது, அதிக வருமானம் ஈட்டும் 1,000 சிங்கப்பூரர்கள் இடைநிலையை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது. அந்த இடைநிலைத் தொகையானது, $3 மில்லியனுக்கும் சற்று அதிகம் எனக் கூறப்பட்டது. அதே நேரத்தில், பொதுச் சேவைக்கான 40% தள்ளுபடி முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
“நல்லாட்சி என்பது நல்ல தலைமைத்துவத்தைச் சார்ந்தே உள்ளது. வழிநடத்துவோர் திறமையாக இருந்தால்தான் அமைப்புகளின் செயல்பாடும் செயல்திறன்மிக்கதாக இருக்கும். அதுவே, அரசாங்கத்தின் தொடக்கப் புள்ளி,” என்றார் திரு வோங்.
சிங்கப்பூரில் ஏற்கெனவே முதல் தரமான பொதுச் சேவைத் துறை இருந்தாலும் அது திறமையான அரசியல் தலைமைத்துவத்திற்கு மாற்றாகாது என்று அவர் குறிப்பிட்டார்.
“மிகவும் திறமையானவர்களுக்கு அரசியலுக்கு வெளியே மாற்று வாய்ப்புகள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறோம். எனவே, அரசியல் சேவையைப் பிரதிபலிக்கும் குறிப்பிடத்தக்க தள்ளுபடியுடன், போட்டித்தன்மைமிக்க ஊதியத்தை அரசியல் பதவி வகிப்போருக்கு வழங்கி வருகிறோம்,” என்றும் பிரதமர் வோங் சொன்னார்.
அரசியல் பதவி வகிப்போர்க்கான சம்பள உயர்வு குறித்து வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும்.


