தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சில்லறை வணிகத் துறையில் செப்டம்பரில் நடப்புக்கு வருகிறது

குறைந்த வருமான ஊழியர்களுக்கு 6% வரை சம்பள உயர்வு

3 mins read
ca08320e-f1cb-4111-bd23-591d521e28cb
ஃபார் ஈஸ்ட் ஃபுளோரா நிலையத்தில் வாடிக்கையாளர்கள் சுயமாகத் தொகையைச் செலுத்திப் பொருள்களைப் பெற்றுச் செல்லும் இயந்திரங்களை மனிதவளத் துணையமைச்சர் தினே‌‌ஷ் வாசு தாஸ் (இடமிருந்து இரண்டாமவர்) பார்வையிட்டார் (ஆகஸ்ட் 11). என்டியுசியின் உதவித் தலைமைச் செயலாளர் இயோ வான் லிங் (வலமிருந்து இரண்டாமவர்)  உடன் இருக்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சில்லறை வணிகத் துறையின் குறைந்த வருமான ஊழியர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுதோறும் 5.1 விழுக்காடு முதல் 6 விழுக்காடு வரை சம்பள உயர்வு கிடைக்கவிருக்கிறது.  

அடுத்த மாதத்திலிருந்து (செப்டம்பர்) 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை ஊழியர்களுக்குக் கிடைக்கவிருக்கும் ஊதிய உயர்வு ஆண்டுக்கு $130க்கும் $160க்கும் இடைப்பட்டிருக்கும்.

2027ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து கொடுக்கப்படும் ஊதிய உயர்வு 2026ன் மறுஆய்வைப் பொறுத்து அமையும். பொருளியல் நிலவரம் மேம்பட்டால் அது மேல்நோக்கித் திருத்தப்படும்.

சில்லறை வணிகத் துறைக்கான முத்தரப்புக் குழுமம் (டிசிஆர்) திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) அதனை அறிவித்தது. படிப்படியாக உயரும் சம்பள முறை குறித்த புதிய பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து குழுமத்தின் அறிவிப்பு வந்துள்ளது.

குழுமம், அதன் முதல் தொகுதிப் பரிந்துரைகளை 2022ல் அறிமுகம் செய்தது. சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளாக இருக்கும் குறைந்த வருமான ஊழியர்கள் அப்போதிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 8.4 விழுக்காட்டிலிருந்து 8.5 விழுக்காடு வரை ஊதிய உயர்வு பெற அவை வழிவகுத்தன.

டிசிஆர், சம்பள உயர்வை முன்வைத்தபோது நடுநிலையான, நடைமுறைக்கேற்ற அணுகுமுறையைப் பின்பற்றியிருப்பதாக தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. சில்லறை வணிகத் துறையில் நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களைக் குழுமம் கருத்தில் எடுத்துக்கொண்டதாக அறிக்கை தெரிவித்தது.

உயரும் செயல்முறைச் செலவு, மனிதவளப் பற்றாக்குறை, மின்வணிகத் தளங்களிலிருந்து அதிகரிக்கும் போட்டி முதலியவற்றால் பெரும்பாலான நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.

அவற்றோடு உலக அளவில் நிலவும் நிச்சயமற்றதன்மையும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக மனிதவளத் துணையமைச்சர் தினே‌‌ஷ் வாசு தாஸ் கூறினார்.

ஃபார் ஈஸ்ட் ஃபுளோரா நிலையத்திற்குத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) சென்றபோது செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

“பொருளியல் சூழலை அரசாங்கம் அணுக்கமாய்க் கண்காணிக்கிறது. தேவைப்பட்டால் மேலும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு நாங்கள் பரிசீலிப்போம்,” என்றார் திரு தினே‌‌ஷ்.

புதிய பரிந்துரைகளின்படி, ஆரம்பநிலை ஊழியர்களுக்குக் கிடைக்கவிருக்கும் ஒட்டுமொத்த மாதச் சம்பளம் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து குறைந்தது $2,305ஆக இருக்கும். தற்போதைய மாத ஊதியமான $2,175ஐக் காட்டிலும் அது அதிகம். பணிநேரத்திற்கு அப்பால் வேலை செய்வதற்குக் கொடுக்கப்படும் தொகை அதில் அடங்காது.

மூத்த ஊழியர்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் அடுத்த மாதம் முதல் $2,395இலிருந்து $2,535க்குக் கூடும்.

துணை மேற்பார்வையாளர்களின் அடிப்படைச் சம்பளம் அடுத்த மாதத்திலிருந்து $2,635இலிருந்து $2,790க்கு அதிகரிக்கும். 2027 செப்டம்பர் முதல் தேதி அது $3,100ஐ எட்டும்.

பகுதி நேர ஊழியர்கள் அல்லது வாரந்தோறும் 35 மணிநேரத்திற்குக் குறைவாக வேலை செய்வோரின் ஒட்டுமொத்தச் சம்பளம் அடுத்த மாதத்திலிருந்து மணிக்குக் கிட்டத்தட்ட 6 விழுக்காடு உயரும்.

சம்பள உயர்வைச் சமாளிக்கத் தகுதிபெறும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதியுதவி அளிக்கும். சம்பள உயர்வில் இவ்வாண்டு 40 விழுக்காடு வரையும் அடுத்த ஆண்டு 20 விழுக்காடு வரையும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும்.

“செலவைக் குறைக்கவும் உற்பத்தித் திறனை மெருகேற்றும் முயற்சிகளை முன்னெடுத்து ஊதிய உயர்வைத் தொடரவும் இது உதவும்” என்று மனிதவள அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

படிப்படியாக உயரும் சம்பள முறையின் கீழ் 53,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலன் பெறுகின்றனர்.

2023ஆம் ஆண்டு நிலவரப்படி சிங்கப்பூரில் 24,500 சில்லறை வணிக நிறுவனங்கள் இயங்கின. அவற்றில் கிட்டத்தட்ட 142,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்