புதிதாகப் பேருந்து ஓட்டுநர் பணியில் சேர்வோருக்கு $450 வரை ஊதிய உயர்வு

புதிதாகப் பேருந்து ஓட்டுநர் பணியில் சேர்வோருக்கு $450 வரை ஊதிய உயர்வு

2 mins read
783a8ee5-6d6a-4cc3-833a-b6f83ca81944
புதிதாக வேலையில் சேருபவர்களுக்குக் கூடுதலாக $2,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்ளூர்வாசிகளைப் பேருந்து ஓட்டுநர் பணிக்கு ஈர்க்கும் விதமாகச் சிங்கப்பூர் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அதன் ஒருபகுதியாக பேருந்து ஓட்டுநர்களின் ஊதியம் 450 வெள்ளி வரை உயர்த்தப்படுகிறது.

இது புதிதாகப் பணியில் சேரும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் பொருந்தும். அதேபோல், புதிதாக வேலையில் சேருபவர்களுக்குக் கூடுதலாக 2,000 வெள்ளி ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

புதிய ஊதிய உயர்வால் பேருந்து ஓட்டுநர்களின் சராசரி ஊதியம் 4,000 வெள்ளிக்கு மேல் இருக்கும். தற்போது அது கிட்டத்தட்ட 3,600 வெள்ளியாக உள்ளது.

ஏற்கெனவே பணியில் உள்ள பேருந்து ஓட்டுநர்களுக்கு நியாயமாக இருக்க வேண்டும் என்பதாலும் ஓட்டுநர்களின் கடின உழைப்பைப் பாராட்டியும் அவர்களின் ஊதியம் ஒருமுறை உயர்த்தப்படுகிறது.

இதுகுறித்த தகவலை நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து தேசியப் போக்குவரத்து ஊழியர்கள் சங்கமும் நான்கு பொதுப் பேருந்து நிறுவனங்களும் புதன்கிழமை (ஜூன் 3) கூட்டறிக்கையாக வெளியிட்டன.

ஓட்டுநர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

ஓட்டுநர்களுக்கான ஊதிய உயர்வை கோ அஹெட் சிங்கப்பூர், எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி, டவர் டிரான்சிட் சிங்கப்பூர் வழங்கும்.

பொதுப் பேருந்துகளில் ஓட்டுநர்களைத் தக்கவைப்பதிலும் புதிதாக ஆள் சேர்ப்பதிலும் சவால்கள் உள்ளன. அதனால் ஊதிய உயர்வு வழங்கி உள்ளூர்வாசிகளை நிறுவனங்கள் ஈர்க்கின்றன.

ஏற்கெனவே வேலையில் உள்ள சிலர் ஓய்வு வயதை நெருங்குகின்றனர். அவர்களின் இடத்தை நிரப்பப் புதியவர்கள் தேவைப்படுகின்றனர்.

அதேபோல் புதிய பேருந்துத்தடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில் சேவையாற்றும் பேருந்துகளிலும் ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றனர். அதனால், புதியவர்களை ஈர்க்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

“அதிக அளவில் பேருந்து ஓட்டுநர்கள் இருந்தால் நிறுவனங்கள் ஊழியர்களின் நலனிலும் அவர்களின் வேலைச் சூழலிலும் கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும். பேருந்து ஓட்டுநர் துறையை மேலும் நீடித்த வேலையாகவும் மாற்ற முடியும்,” என்று போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்