சம்பளம், நியாயமற்ற பணிநீக்கக் கோரிக்கைகள் அதிகரிப்பு

சம்பளம், நியாயமற்ற பணிநீக்கக் கோரிக்கைகள் அதிகரிப்பு

படம்: சாவ்பாவ்

24 Jul 2026 - 8:27 pm

2 mins read

சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டில் சம்பளக் கோரிக்கைகளும் நியாயமற்ற பணிநீக்கம் தொடர்பான புகார்களும் அதிகரித்துள்ளன. 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு இவை ஆக அதிக அளவை எட்டியுள்ளதாக மனிதவள அமைச்சும் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக மறுசீரமைப்பு, ஆட்குறைப்பு, நிறுவனங்கள் மூடப்படுதல் போன்றவை அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

கடந்த ஆண்டில் மொத்தம் 13,083 வேலைவாய்ப்புக் கோரிக்கைகளும் மேல்முறையீடுகளும் பதிவாயின. இது 1,000 ஊழியர்களுக்குச் சராசரியாக 3.44 கோரிக்கைகள் என்ற அளவில் உள்ளது.

இவற்றுள் பெரும்பாலானவை சம்பளம் தொடர்பானவை ஆகும். 2024ல் 9,848ஆக இருந்த சம்பளக் கோரிக்கைகள், 2025ல் 10,801ஆக உயர்ந்தன.

குறிப்பாக, வெளிநாட்டு ஊழியர்கள் தாக்கல் செய்த கோரிக்கைகளே இந்த உயர்வுக்கு முதன்மைக் காரணமாக அமைந்தன. வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகளில் கட்டுமானம், உணவு-பானத் துறை, தொழில்முறை சேவைத் துறைகள் முதலிடத்தில் உள்ளன.

அதேவேளையில், உள்ளூர் ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகள் பெரிய மாற்றமின்றிச் சீராகவே இருந்தன. நியாயமற்ற பணிநீக்கம் தொடர்பான புகார்களும் 1,000 ஊழியர்களுக்கு 0.57 என்ற அளவில் அதிகரித்தன.

அதிகரித்து வரும் இத்தகைய கோரிக்கைகளுக்கு இடையே, பெரும்பாலான பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட சம்பளக் கோரிக்கைகளில் 88 விழுக்காட்டிற்கும் அதிகமானவை சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி அமைப்பின் சமரசம் மூலம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டன.

மேலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குச் சேர வேண்டிய $22 மில்லியனுக்கும் அதிகமான நிலுவைச் சம்பளத் தொகையும், நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கான $2.71 மில்லியன் இழப்பீட்டுத் தொகையும் வெற்றிகரமாக மீட்டுத் தரப்பட்டுள்ளன.

சம்பளம் வழங்காதது ஒரு குற்றம் என்றும் தங்கள் ஊழியர்களுக்கு முழுச் சம்பளம் வழங்காத முதலாளிகள் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கு இது கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்றும் மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

வேலைவாய்ப்புக் கோரிக்கைகள் உயர்ந்த போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புத் தரநிலைகள் சீர்குலையவில்லை என்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
வெளிநாட்டு ஊழியர்பணிநீக்கம்மனிதவள அமைச்சு